ஓய்வு குறித்து அறிவித்தார் ரோஸ் டெய்லர்!
நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ரோஸ் டெய்லர் ஏப்ரல் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஏப்ரல் மாதம் வரையான காலப் பகுதியில் அவர், பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்துக்கு எதிரான ஆறு ஒருநாள் போட்டிகளிலும் விளையாடுவார்.
ஓய்வு குறித்து டுவிட்டர் பதிவில் அறிவித்துள்ள டெஸ்லர், தனது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியது தனக்கு பெருமையான விடயம் என்று கூறியுள்ளார்.
37 வயதான டெய்லர், தற்போது 110 டெஸ்ட் போட்டிகளிலும், 233 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி, நியூஸிலாந்து சார்பில் அதிக ஓட்டங்களை எடுத்த முதல் வீரராகவுள்ளார்.
அதன்படி டெஸ்ட் அரங்கில் 7,584 ஓட்டங்களையும், ஒருநாள் அரங்கில் 8,581 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.
2007 நவம்பரில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக தனது முதல் டெஸ்டில் விளையாடுவதற்கு முன்பு 2006 மார்ச்சில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர் சர்வதேச ஒருநாள் அரங்கில் அறிமுகமானார்.
பெர்த்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 290 ஓட்டங்களை குவித்தமை டெஸ்ட் போட்டிகளில் அவர் பெற்ற அதிகபடியான ஓட்டமாகும்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றபோது அணியின் ஓர் முன்னணி வீரராகவும் டெஸ்லர் இடம்பெற்றிருந்தார்.
இது தவிர 112 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 3299 ஓட்டங்களை குவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.