
பயங்கரவாத தடைச்சட்டம் !
பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்கு நீதியமைச்சின் செயலாளர் தலைமையில் துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய குழு நியமிக்கப்படும். குழுவின் அறிக்கைக்கு அமைவாக பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான சட்டமூலம் வெகுவிரைவில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். |
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற அமர்வின் போது 2025.01.08 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 27 / 2 இன் கீழ் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க (தற்காலிகம்) பயங்கரவாத தடைச்சட்டம் ' அப்போதைய நிலைமைக்கு முகங்கொடுக்கும் வகையில் அதாவது பயங்கரவாத செயற்பாடுகளை தடுத்தல், ஏதேனும் அமைப்பு அல்லது நபர் இலங்கைக்குள்ளும், வெளியிலும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதை தடுக்கும் நோக்கில் ' இந்த சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டம் பல்வேறு திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டு 46 ஆண்டுகாலமாக இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய 1988 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க சட்டம், 2022 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க சட்டம் ஆகியவற்றின் ஊடாக மனித உரிமைகள் மற்றும் உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் மற்றும் பொது கோட்பாட்டுக் கொள்கைகள் முதன்மை சட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன. பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்தம் செய்வதற்கு கடந்த அரசாங்கங்களும் பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. இதற்கமைய கடந்த அரசாங்கம் 2023.09.15 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் ஊடாக திருத்தச் சட்டமூலத்தை பிரசுரித்திருந்தது. இந்த சட்டமூலத்துக்கு எதிராக சிவில் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்வதற்காக உயர்நீதிமன்றம் பல அறிவுத்தல்களை முன்வைத்துள்ளது. நீதிமன்றம் முன்வைத்துள்ள அறிவுறுத்தல்கள் கடந்த பாராளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வை குழுவில் இரண்டு நாட்கள் ஆராயப்பட்டுள்ளது. சட்டமூலத்தை மேலும் பரிசீலனை செய்து பரிந்துரைகளை முன்வைக்கும் பொருட்டு நீதியமைச்சின் செயலாளர் தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை பத்திரம் ஒன்றை அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளேன். குழுவின் பரிந்துரைகள் கிடைத்தவுடன், பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்யவோ அல்லது மாற்று நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்பு ( தற்காலிக விசேட ஏற்பாடுகள் ) திருத்தச் சட்டத்தில் கைது செய்யப்படும் சந்தேக நபரை 72 மணித்தியாலங்கள் தடுப்பு காவலில் வைத்திருப்பதற்கான ஏற்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்படும் சந்தேக நபரை வேண்டிய காலம் வரை தடுத்து வைப்பதற்கான இயலுமை காணப்பட்டது. இதனால் ஏற்படும் மனித உரிமை மீறல்கள் 2022 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க விசேட ஏற்பாடுகள் திருத்த சட்டத்தில் தடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக்கு நான் சமர்ப்பித்த பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்து. இதற்கமைவாக நீதியமைச்சின் செயலாளர் தலைமையில் துறைசார் நிபுணர் குழுவை நியமிப்பதற்கு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. துறைசார் குழு முன்வைக்கும் பரிந்துரைகளை மீளாய்வு செய்து, பயங்கரவாத தடைச்சட்டத்தை பரிசீலனை செய்து, அதற்கு பதிலாக புதிய சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு சமரப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார். |