
இராணுவத்தினர் மீது கைவைக்க விடமாட்டோம்!
இலங்கையின் முன்னாள் படை பிரதானிகளுக்கு விதித்துள்ள தடையை பிரித்தானியா உடனடியாக நீக்கிக் கொள்ள வேண்டும். பிரித்தானிய அரசாங்கத்தின் முன்பாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தலைக்குனிந்துள்ளமைக்காக ஒட்டுமொத்த இலங்கையர்களும் தலைகுனிய போவதில்லை. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினர் மீது கைவைப்பதற்கு இலங்கையின் இறையாண்மையை நேசிக்கும் மக்கள் இடமளிக்க போவதில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார். |
இலங்கையின் பாதுகாப்பு படைகளின் முன்னாள் பிரதானிகள் மூவருக்கு எதிராக பிரித்தானிய அரசாங்கம் விதித்துள்ள தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய சுதந்திர முன்னணியினர் கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் முன்பாக நேற்று திங்கட்கிழமை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த தடையை நீக்குமாறு வலியுறுத்தி பிரித்தானிய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் மகஜர் ஒன்றை கையளித்தனர். இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்ட தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர குறிப்பிடுகையில், முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட உட்பட முன்னாள் இராணுவத் தளபதிகளான சவேந்திர சில்வா, ஜகத் ஜெயசூரிய ஆகியோருக்கும், புலிகள் அமைப்பை அழிப்பதற்கு இலங்கை இராணுவத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய கருணா அம்மானுக்கும் பிரித்தானியா தடை விதித்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த நாட்டில் தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரை விடுதலை புலிகள் அமைப்பினர் படுகொலை செய்தனர். நாட்டுக்கு எதிரான பயங்கரவாத யுத்தத்தையே இராணுவத்தினர் முடிவுக்கு கொண்டு வந்தனர்.நாட்டு மக்கள் இன்று சுதந்திரமாக வாழ்வதற்கு இராணுவத்தினர் தமது உயிரை பணயம் வைத்து போராடினார்கள்.அதனால் தான் ஒட்டுமொத்த மக்களும் சுதந்திரமாக வாழ்கிறார்கள். மிலேட்சத்தனமான விடுதலை புலிகள் பயங்கரவாத அமைப்பையே இராணுவத்தினர் முடிவுக்கு கொண்டு வந்தனர். தமது உயிரை பயணம் வைத்த இராணுவத்தினரையே பிரித்தானியா இன்று பழிவாங்குகிறது. பிரித்தானிய இராணுவம் சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளியாக்கப்பட்டுள்ளது. இவர்கள் தான் இன்று இலங்கையின் மனித உரிமைகள் பற்றி அக்கறை கொண்டுள்ளார்கள். தடை விதிக்கிறார்கள். பிரித்தானியாவின் ஒருதலைப்பட்சமான செயற்பாட்டை தேசிய இனம் என்ற அடிப்படையில் வன்மையாக கண்டிக்கிறோம்.இலங்கையின் முன்னாள் படை பிரதானிகளுக்கு விதித்துள்ள தடையை பிரித்தானியா உடனடியாக நீக்கிக் கொள்ள வேண்டும். பிரித்தானிய அரசாங்கத்தின் முன்பாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தலைக்குனிந்துள்ளமைக்காக ஒட்டுமொத்த இலங்கையர்களும் தலைகுனிய போவதில்லை. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினர் மீது கைவைப்பதற்கு இலங்கையின் இறையாண்மையை நேசிக்கும் மக்கள் இடமளிக்க போவதில்லை.எமது உயிரை பணயம் வைத்தேனும் எமது இராணுவத்தினரை பாதுகாப்போம் என்றார். |