அனுர அரசுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம்-

02.09.2026 08:50:03

அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவியேற்று எதிர்வரும் 12ஆம் திகதியுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டி அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

  

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஏற்பாட்டில் எதிர்வரும் 12ஆம் திகதி காலை 7.30 மணியளவில் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் நேற்று நடைபெற்றதுடன், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல், காணிகளை விடுவித்தல், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், மாகாண சபைத் தேர்தலை நடத்துதல் மற்றும் புதிய அரசியலமைப்பை உருவாக்குதல் உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என கூட்டணியின் பங்காளிக் கட்சித் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சிக்கு வந்த அரசாங்கம், வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும், தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்றனர் என்பதை வெளிப்படுத்தும் நோக்கிலேயே போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் போராட்டத்தில் தமிழ் அரசியல் கட்சிகளுடன் பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புகள் மற்றும் பொதுமக்களும் இணைந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வலிகாமம் வடக்கில் காணி விடுவிப்பு, பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களில் அரசாங்கம் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனவும் கூட்டணியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.