ஐயாவுக்கு இரங்கல்
திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான மறைந்த இராஜவரோதயம் சம்பந்தனின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு அரசியல் தலைவர்கள், சமூக பிரதிநிதிகள் உள்ளிட்டோர் தங்களுடைய இரங்கலை தெரிவித்துள்ளனர்.
‘நீதிக்காக வாழ்வை அர்ப்பணித்திருந்தார்”
இலங்கை தமிழ் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து ஆழ்ந்த துயரடைந்தேன் என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
பல தசாப்தகாலமாக எனக்கும் அவருக்கும் இடையில் நடைபெற்ற பல்வேறு சந்திப்புகள் மற்றும் உரையாடல்களை இச்சந்தர்ப்பத்தில் நினைவில்கொள்கின்றேன். இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் சமத்துவம், கௌரவம் மற்றும் நீதிக்கான போராட்டத்துக்காக அவர் தனது முழு வாழ்வையும் அர்ப்பணித்திருந்தார்.
அவரது குடும்பத்தினருக்கும் பிமானிகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
“கொள்கை வேறு, கோட்டை வேறு”
தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் இரா சம்பந்தன் அவர்கள் வயதில் எமக்கு மூத்தவர்,. கொள்கை வேறு, கோட்டை வேறாக இருப்பினும் அரசியல் தளத்தில் எம்முடனும் சம காலத்தில் பயணித்தவர், முரண்பாடுகள் இருப்பினும் காணும் பொழுதுகளில் அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதுண்டு. வயது மூப்பின் காரணமாக அவர் மரணித்திருந்தாலும் அச்செய்தி துயரை தந்துள்ளது. அவரது இழப்பில் துயருறும் சகலருக்கும் ஆறுதல் கூறுகின்றேன்,.
அஞ்சலி மரியாதை என அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா தனது இரங்கல் செய்தியில் தெரிவித்தார்.
“தூணாக இருந்தவர்”
இலங்கையின் நீண்டகால எம்.பி.க்களில் ஒருவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நீண்டகாலத் தலைவருமான ஆர்.சம்பந்தன் காலமானதைக் கேட்டு நான் மிகுந்த வருத்தமடைகிறேன் என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
6 தசாப்தங்களாக அரசியலில் ஈடுபட்டுள்ள அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவானதில் இருந்து அதன் தூணாகவும், இலங்கை அரசியல் அரங்கில் ஒரு முக்கியஸ்தராகவும் இருந்து வருகிறார்.
இந்த கடினமான காலகட்டத்தை கடந்து செல்லும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என குறிப்பிட்டுள்ளார்.
“அரசியல் பரப்புக்கு பேரிழப்பாகும்”
தமிழ்த் தேசியப்பரப்பின் மூத்த அரசியல், சட்ட ஆளுமை தமிழ்த் தேசத்திலிருந்து தன்னை நிரந்தரமாக விடுவித்துக் கொண்டது.
இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ இரா.சம்பந்தன் ஐயாவின் இழப்பு தமிழ்த் தேசிய அரசியல் பரப்புக்கு பேரிழப்பாகும். தனது சட்டத் தொழிலை தியாகம் செய்து தன்னை மக்கள் அரசியலில் ஈடுபடுத்திய பெருமகனார் ஆவார் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தவிசாளர் அங்கஜன் இராமநாதன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் மூன்று வகையான போராட்ட காலங்களிலும் தனது அரசியல் சாணக்கியத்தையும், அனுபவத்தையும் பல சந்தர்ப்பங்களில் இராஜதந்திரங்களாக அவர் பயன்படுத்தியிருந்ததை இத்தருணத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.
திருகோணமலை மாவட்டத்தின் தமிழர் பிரதிநிதித்துவத்தின் இறுதி நம்பிக்கையாக திகழ்ந்த அவரது இழப்பு ஈடுசெய்யப்பட முடியாதது.
அன்னாரின் இழப்பால் துயரடைந்துள்ள குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அரசியல் கட்சியினர், ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“உலகறிய சொன்னவர்”
தான் முதலில் ஓர் இலங்கையன். அப்புறம் தமிழன். ஆனால், சிங்கள பெளத்த இலங்கையன் அல்ல. சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற "பல்லின-பன்மொழி-பன்மத" இலங்கையன். பன்மைத்துவம் என்ற அடிப்படையில் சேர்ந்து வாழ்வோம் என்று உலகறிய சொன்னவர். அப்படி சொல்லி சிங்க கொடியையும் யாழ் மேடையில் தூக்கி காட்டியவர். அதற்காக தமிழ் தேசிய வாதிகளால் கடுமையாக விமர்சிக்க பட்டவர் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
எல்லாவற்றையும் மீறி நல்லாட்சி காலத்தில் ரணில் விக்கிரமசிங்கவை நம்பி இரண்டு வருடத்துக்கு குறையாமல், வழிகாட்டல் குழுவில் அமர்ந்து, புது அரசியலமைப்பை எழுதி முடிக்க பாடு பட்டவர். அதை நம்பி "தீபாவளிக்கு தீர்வு", "பொங்கலுக்கு தீர்வு" என்று கெடு கூறி அதற்காகவும் கடுமையாக விமர்சிக்கபட்டவர் என்றும் கூறியுள்ளார்.
அறிவு, ஆன்மா, உடல் என்ற மனித கூறுகளில், உடலால் மட்டுமே பலவீனமாக இறுதி காலத்தில் இருந்தார். அறிவும், ஆன்மாவும் பலம் இழக்கவே இல்லை. நான் அவரது கட்சி அங்கத்தவன் இல்லை. ஆனால், இந்த "சிங்க கொடி முதல் வழி காட்டல் குழு" சம்பவங்கள் வரை எல்லாவற்றையும் அவருக்கு மிக பக்கத்தில் இருந்து நேரடியாக பார்த்தவன்.
அவரை மதித்து, அவரை பயன் படுத்தி, பிரிபடாத இலங்கைக்குள் தீர்வு தேட தவறிய அனைத்து சிங்கள பெளத்த தேசிய கட்சிகளின் தலைவர்களும் இப்போது வரிசையாக வந்து, “இரா சம்பந்தனுடன் எனக்கு முப்பது வருட பழக்கம், நாற்பது வருட பழக்கம், ஐம்பது வருட பழக்கம் என்று அளப்பார்கள். அதையும் உங்கள் சாகாத ஆன்மா எங்கோ இருந்த படி கேட்க போகிறது, சம்பந்தன் ஐயா.” பிரிவோம்..! சந்திப்போம் என்றார்.
“நீடித்த பாரம்பரியத்தை விட்டுச்சென்றது”
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.சம்பந்தனின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தமடைகிறேன் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். .
அவரது கொள்கைகளுக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஒரு நீடித்த பாரம்பரியத்தை விட்டுச்சென்றது. இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். .
“அவரது இழப்பு பெரிதும் உணரப்படும்”
இலங்கை தமிழரசு கட்சியின் பெரும் தலைவர் இரா. சம்பந்தனின் மறைவிற்கு முன்னாள் இராணுவ தளபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தனது எக்ஸ் பக்கத்தின் ஊடாக இரங்கலை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் “எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆர்.சம்பந்தன் மிகவும் மூத்த அரசியல்வாதி. அவரது இழப்பு பெரிதும் உணரப்படும்.” என பதிவிட்டுள்ளார்.
“இலங்கை தேசத்திற்கே பேரிழப்பு”
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் ஐயாவின் மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ரமேஸ்வரன் வெளியிட்டுள்ளார்.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக இலங்கைாஅரசியலில் சேவையாற்றிய இராஜவரோதயம் சம்பந்தன் ஐயாவின் மறைவு வடக்கு, கிழக்கு தமிழர் மட்டுமல்லாமல் இலங்கை தேசத்திற்கே பேரிழப்பாகும்.
அனைத்து இலங்கையர்களுக்கும் சம உரிமைகளை வழங்குவதற்கான அவரது அர்ப்பணிப்பு மிக்க பயணமும் அவருடைய நேர்மையான மற்றும் நியாயமான தலைமை எல்லா அரசியல்வாதிகளுக்கும் ஊக்கமளிக்கும். தமிழ் சமூகத்தின் அசைக்க முடியாத அரசியவாதியும் ஆளுமைமிக்க மனிதருமாவார். அவரின் மறைவு இலங்கை அரசியலில் பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர்களான சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோருடன் நெருங்கிய நட்பை பேணியவர். இராஜவரோதயம் சம்பந்தன் ஐயாவின் பிரிவால் வாடும் அனைவருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
“ஆணிவேராக நோக்கப்படுபவர்”
இலங்கை அரசியலில் இருந்த மூத்த சிறுபான்மை தலைவர் இரா. சம்பந்தன் ஐயா காலமான செய்தி அறிந்து மிகவும் கவலை அடைந்தேன். தமிழ் மக்களின் ஆணிவேராக நோக்கப்படும் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் சட்டத்தரணி இரா. சம்பந்தன் அவர்கள் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானதாக அறிந்து மிகவும் கவலை அடைந்தேன் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் விடுத்துள்ள அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.
“ஒரு மாமனிதராவார்”
தமிழினத்தின் விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த மூத்த அரசியல் தலைவர் இரா. சம்பந்தனின் மறைவுக்கு தொழிலாளர் தேசிய சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது என சங்கத்தின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இலங்கை வரலாற்றில் சிரேஷ்ட அரசியல்வாதிகளில் ஒருவரான இரா. சம்பந்தன் அனைத்து இனத்தவராலும் மதிக்கப்பட்ட சர்வதேச ரீதியில் நன்கு அறியப்பட்ட ஒரு மாமனிதராவார். அமரர் அப்பாதுரை அமிர்தலிங்கத்துக்குப் பிறகு தமிழர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த பெருமைக்குரியவர்.
மலையக மக்களின் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் அரசியல் ரீதியில் தீர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்த அவரின் பிரிவால் வாடும் குடும்பத்தாரினரதும் கட்சியினதும் துயரத்தில் பங்கு கொள்வதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“ஈழத் தமிழர் வரலாற்றில் ஈடு செய்ய முடியாதது”
இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் மறக்க முடியாதவரும், மறுக்க முடியாதவருமாகிய ஈழ தமிழ்ச் சமுகத்தின் மிகப்பெரும் தூணாகத் திகழ்ந்தவரும் ஆன, இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் ராஜவரோதயம் சம்பந்தன் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன் என அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இ.பி.எஸ்) தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரின் அடுத்த தலைமுறை பாதுக்காப்பான வாழ்வியலை கட்டமைக்க, ஒரு சரியான அடித்தளத்தை அமைத்த தமிழின தலைவரான அவரது இழப்பு, ஈழத் தமிழர் வரலாற்றில் ஈடு செய்ய முடியாத ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது. அன்னாரது ஆன்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன் என்று தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
“கண்ணியமான தலைவர்”
காலம் சென்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆர். சம்பந்தன் ஐயாவின் மரணச் செய்தி கேட்டு மிகவும் ஆழ்ந்த கவலை அடைகிறேன் என முன்னாள் அமைச்சரும் முன்னாள் ஆளுநருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் வெளியிட்டுள்ள அனுதாப அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக சம்பந்தன் ஐயா 1989ஆம் ஆண்டு தொடக்கம் என்னோடு பாராளுமன்றத்தில் இருந்த ஒருவர் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு மட்டத்தில் பல்வேறுபட்ட கலந்துரையாடல்களை மேற்கொண்டு பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுத்தந்தவர்.
அத்துடன் மூதூரில் விடுதலை புலிகள் முஸ்லிம் மக்களை வெளியேற்றிய போது அது தொடர்பில் இரண்டு மூன்று நாட்கள் அவரோடு தொடர்ச்சியாக கலந்துரையாடினோம்.
அவர் மிகவும் நீதியாகவும், நியாயமாக நடந்து கொள்கின்ற ஒருவர், நான் கிழக்கு மாகாணத்தில் அமைச்சராக, ஆளுநராக இருந்த காலப்பகுதியில் என்னுடைய முன்னெடுப்புகளுக்கு முழு ஆதரவையும் வழங்கிய ஒருவர்.
நான் எப்பொழுதும் மரியாதையோடும் கண்ணியமாகவும் பார்க்கின்ற ஒரு தலைவர்.
தமிழ் சமூகத்தின் வடகிழக்கு பிரச்சினை தீர்வின்போது முஸ்லிம் சமூகத்தினுடைய பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கப்பட வேண்டும் என்பதில் மிகவும் மும்முரமாக இருந்த ஒருவர்.
தான் வயது முதிர்ந்த காலத்திலும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் மிகவும் துணிச்சலாகவும் 13வது சட்ட திருத்த விடயத்தில் மிகவும் காரமாக நடந்து கொண்ட மிகப்பெரிய ஒரு தலைவர்.
என்றும் சிறுபான்மை சமூகத்திற்காக இப்பொழுதும் குரல் கொடுக்கும் ஒரு பெரும் தலைமைத்துவத்தை நாம் இன்று இழந்து இருக்கிறோம். அவருடைய இழப்பால் கட்சிக்கும் அவருடைய குடும்பத்திற்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் அமைச்சரும் முன்னாள் ஆளுநருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் வெளியிட்டுள்ள அனுதாப அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“நல்லிணக்கத்துக்கு பேரிழப்பு”
தமிழரசுக்கட்சியின் தலைவரும் மூத்த தமிழ் அரசியல்வாதியுமான இராஜவரோதயம் சம்பந்தன் ஐயாவின் இழப்பு தமிழ்ச் சமூகத்துக்கு மாத்திரமன்றி, நல்லிணக்கத்தை விரும்பும் அனைத்து இலங்கையர்களுக்கும் பேரிழப்பாகும் என்று வட மேல் மாகாண ஆளுனர் நஸீர் அஹமட் தனது அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.
சம்பந்தன் ஐயாவின் எதிர்பார்ப்பின் பிரகாரம் உரிமை சார் அரசியல் போராட்டங்களில் கைகோர்த்துச் செயற்படுவதும், பரஸ்பர விட்டுக் கொடுப்புடன் நல்லிணக்க அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதுமே அன்னாருக்கு நாம் செய்யக்கூடிய உண்மையான அஞ்சலியாகும்.
அன்னாரின் மறைவு தொடர்பில் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
“கவலை அடைகின்றேன்”
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 14 ஆவது எதிர்க்கட்சித் தலைவரும், சிரேஷ்ட அரசியல்வாதியும், சட்டத்தரணியுமாகிய திருவாளர் இராஜவரோதயம் சம்பந்தனின் மறைவுச் செய்தி அறிந்து கவலை அடைகின்றேன் என வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
சுமார் ஐந்து தசாப்த அரசியல் வரலாற்றில் மிக நீண்ட காலம் தமிழ் மக்களின் உரிமைக் குரலாக இலங்கை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்ததுடன், தமிழ் மக்களின் உரிமைக்காக சர்வதேச ரீதியிலும் செயற்பட்ட தலைவராக காலம் சென்ற இரா. சம்பந்தன் காணப்படுகின்றார்.
இன ஐக்கியம், ஒருமைப்பாடு, நல்லிணக்கம் என்பவற்றின் அடிப்படையில் நாட்டு மக்களின் நன்மைக் கருதி அன்னார் செயற்பட்டார் என்றால் மிகையாகாது. இத்தகைய ஒரு பெரும் தலைவரின் இழப்பானது தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. அன்னாரின் மறைவானது இலங்கை வாழ் மக்களுக்கு பேரிழப்பாகும்.
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஓங்கி ஒலித்துகொண்டிருந்த குரல் இன்று மௌனித்துள்ளது. காலம் சென்ற திருவாளர் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றேன். அன்னாரின் பிரிவால் மீளாத் துயரில் வாடும் அவரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஏனைய அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
“ஐயாவின் குரல் மௌனித்தது”
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதுபெரும் தலைவரும் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினருமான ராஜவரோதயம் சம்பந்தன் மறைவிற்கு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் சுரேஷ். க. பிமேச்சந்திரன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் தமக்கென ஓர் ஆட்சிமுறையை உருவாக்கி ஒன்றுபட்ட நாட்டிற்குள் அவர்கள் சுதந்திரமாகவும் கௌரவமாகவும் வாழவேண்டும் என்ற உறுதியான கொள்கையுடன் செயற்பட்டது மாத்திரமல்லாமல்,
ஒவ்வொரு சர்வதேச சமூகத்துடனான சந்திப்புகளிலும் ராஜதந்திர மட்ட சந்திப்புகளிலும் இதனை வலியுறுத்தி வந்தவர்.
சிங்கள சமூகம் தமிழ் மக்கள்மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்ற காரணத்தின் அடிப்படையில் ஐக்கியப்பட்ட பிரிக்கப்பட முடியாத பிரிபடாத நாட்டிற்குள் தமிழ் மக்களுக்கு உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தவர். இதற்காக பாராளுமன்றத்திலும் சர்வதேச அரங்குகளிலும் சிங்கள அரசியலவாதிகளுடனும் கலந்துரையாடி குரல்கொடுத்து வந்தவர்.
தந்தை செல்வா, அ.அமிர்தலிங்கம் ஆகியோரின் வழியில் தமிழரசுக்கட்சியின் தலைவராகப் பணிபுரிந்தது மாத்திரமல்லாமல் இலங்கைத் தீவில் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் குரல்கொடுத்த பெருந்தலைவர்களில் திரு. சம்பந்தனும் ஒருவர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அங்கம் வகித்த காலத்தில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக அவருடன் இணைந்து பணியாற்றி காலத்தை நான் நினைத்துப் பார்க்கின்றேன்.
அன்னாருடன் பழகிய தருணங்களை நெஞ்சில் நிறுத்தி ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அன்னாரின் மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றது. அன்னாரின் குடும்பத்தினர், தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள், நண்பர்கள் உற்றார் உறவினர் அனைவருக்கும் எமது கட்சியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
“அயராது உழைத்தவர்”
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதுபெரும் தலைவரும் கடந்த அரை நூற்றாண்டாகத் திருகோணமலை மாவட்டத்தைப் பிரதிநித்துவப்படுத்தி நின்றவரும் இலங்கைத் தமிழர் இனச் சிக்கலுக்கு தீர்வுக்கான அயராது உழைத்து வந்தவருமான மாண்புமிகு இரா. சம்பந்தன் ஐயா இயற்கை எய்திய செய்தி அறிந்து அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைகின்றோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சி திருக்கோணமலை மாவட்ட தலைவர் க.ச.குகதாசன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஐயாவின் பிரிவால் வாடும் அவரது மனைவி , மக்கள், மருமகள் ,பேரன் உள்ளிட்ட உற்றார் உறவினர் அனைவருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் சார்பில் இரங்கலையும் துயர் பகிர்வினையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
“அதிர்ச்சியும் வருத்தமும் அடைகின்றேன்”
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவர்களின் மறைவில் நான் ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைகின்றேன்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நீண்டகால நண்பரும், இலங்கையின் ஒரு முன்மாதிரியான மற்றும் நம்பிக்கைக்குரிய தலைவரும் ஆவார் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.