பொருளாதார நெருக்கடியை வென்றெடுக்க கூட்டு முயற்சி.

11.03.2026 15:00:00

தனித்தனியாக அல்லாமல் கூட்டு முயற்சியுடன் செயற்படுவதன் மூலம், மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சவால்களை வெற்றிகொள்ள முடியும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இலங்கை இளம் தொழில்முனைவோர்கள் சபையின் 2026 வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியானது 2022 ஆம் ஆண்டைப் போன்ற டொலர் தட்டுப்பாடு அல்ல எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இது விநியோகப் பாதைகள் முடங்கியதால் ஏற்பட்டுள்ள ஒரு 'வெளிப்புற அதிர்ச்சி.

மார்ச் மாத தொடக்கத்தில் 70 டொலராக இருந்த ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை, தற்போது 100 டொலர் வரை (42 சதவீத அதிகரிப்பு) உயர்ந்துள்ளதால் உலகச் சந்தையில் நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளைச் சேமிக்கத் தொடங்கியுள்ளனர்.

"மார்ச் 1ஆம் திகதி 4 ஆயிரத்து 500 கிலோ லீற்றராக இருந்த டீசல் விற்பனை, மார்ச் 3ஆம் திகதி 10 ஆயிரத்து 500 கிலோ லீற்றராக அதிகரித்துள்ளது. பீதி அடையத் தேவையில்லை. அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தடையற்ற எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த அரசு நட்பு நாடுகளுடன் பேச்சு நடத்தி வருகின்றது." - 

நவீன தொழில்நுட்பங்களுடன் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதே அரசின் இலக்கு எனத் தெரிவித்த அவர், அதற்கான விரிவான திட்டத்தில் டிஜிட்டல் மயமாக்கல் முக்கிய அங்கமாகும் .

செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு மையங்களை மையப்படுத்திய பொருளாதாரத்தை நோக்கி நகர, இந்த வரவு - செலவுத் திட்டத்தில் 6.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இந்த ஆண்டு இறுதிக்குள் ‘டிஜிட்டல் அடையாள அட்டை’ கட்டாயம் வெளியிடப்படும்.

"நாங்கள் பதவியேற்றபோது இருந்த பொருளாதார ஐயங்கள் இன்று நீங்கியுள்ளன. 2025 இல் இலங்கை வரலாற்றில் மிகக் குறைந்த வரவு - செலவுத் திட்டப் பற்றாக்குறையைப் பதிவு செய்துள்ளோம். இப்போது எமக்குத் தேவைப்படுவது அசைக்க முடியாத, வெளிப்புற மற்றும் உள்நாட்டு அதிர்வுகளுக்குத் தாக்குப் பிடிக்கக்கூடிய ஒரு பலமான பொருளாதாரமாகும்."

நாட்டின் பொருளாதாரத்தில் இளம் தொழில்முனைவோரின் பங்கு முக்கியமானது என்று பாராட்டிய ஜனாதிபதி, அவர்கள் தமது வர்த்தகத்தை அடுத்த சில ஆண்டுகளில் இரட்டிப்பாக்க வேண்டும் என்றும், அதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்.