மீண்டும் அரசியல் களத்தில் கோட்டாபய!

19.08.2022 10:14:53

 

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு வருவார் என உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறான நிலையில், கோட்டாபயவை நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்வதற்காக தற்போது பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவர் பதவி விலகுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் தங்கியிருக்கும் கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 24 ஆம் திகதி சிறிலங்கா வரவுள்ளதாக ரஷ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவரும் கோட்டாபயவின் உறவினருமான உதயங்க வீரதுங்க நேற்று முன்தினம் ஊடகங்களிடம் கூறியிருந்தார்.

கோட்டாபய மீண்டும் அரசியலில் ஈடுபடமாட்டார்

இதேவேளை கோட்டாபய ராஜபக்ச சிறிலங்காவில் அரசியலில் ஈடுபடுவார் என தான் நம்பவில்லை என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியிருந்தார்.

கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி நாட்டில் நடந்த பாரிய எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக கோட்டாபய நாட்டில் இருந்து தப்பிச் சென்றார்.

சிறிலங்கா விமானப்படை விமானத்தில் மாலைதீவு சென்ற, அவர் அங்கிருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்று அங்கு ஒரு இரண்டு வாரங்களுக்கு மேல் தங்கியிருந்தார்.

90 நாட்களுக்கு வழங்கப்பட்ட விசா

அதனையடுத்து சிங்கப்பூரில் இருந்து அவர் கடந்த 11 ஆம் திகதி இரவு தாய்லாந்து சென்றடைந்தார். தாய்லாந்தில் தங்கியிருக்க அவருக்கு 90 நாட்களுக்கு விசா அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.