“கேட்கக் கேட்க மனசு பதறுகிறது”

02.08.2024 08:07:40

கேரளாவில் தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த கனமழை காரணமாக வயநாடு மாவட்டத்திலுள்ள முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதியில் கடந்த 30ஆம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதுவரை அதில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 280க்கும் மேலாக அதிகரித்துள்ளது. அதில் கண்டுபிடிக்கப் படாதவர்கள் மட்டும் 216 மேற்பட்டோர் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து இராணுவ வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர்கள் நிலச்சரிவுக்கு இடையில் பாலம் அமைத்து, மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதில் பல்வேறு இயக்கங்களும் பொது மக்களும் தங்களால் முடிந்த நிவாரணத்தை பாதிக்கப்பட்டோருக்கு வழங்கி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மலையாள சினிமா திரைப்பிரலங்கள் பலர் நேரடியாகவும் ஆன்லைன் மூலமும் பாதிக்கப்பட்டோர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். தமிழ் சினிமா நடிகர்களில் விக்ரம் ரூ. 20 லட்சமும் சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் இணைந்து ரூ. 50 லட்சமும் கேரள பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கியுள்ளனர். மேலும் இந்தியா முழுவதுமுள்ள அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள்  பலர் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும், இரங்கல்களையும் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சூரி தனது எக்ஸ் பக்கத்தில் இப்பேரிடர் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், “வயநாடு செய்திகள் கேட்கக் கேட்க மனசு பதறுகிறது! நாம் அனைவரும் கொண்டாடிய பசுமையான இடங்கள் எல்லாம் இயற்கை அன்னையின் பெரும் சீற்றத்துக்கு இரையாகி உள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கான மக்கள் வீடும் வாழ்வாதாரமும் இழந்து உள்ளனர், அங்கிருந்து வரும் காட்சிகள் பார்க்கப் பார்க்க பகீரென்கிறது!!  வயநாடு மக்களுக்காக அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன். நாம் அனைவரும் நம்மால் இயன்ற உதவிக்கரம் நீட்ட வேண்டும். இந்த நேரத்தில் களத்தில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டு இருக்கும் நல்லுள்ளங்கள் அனைவருக்கும் அந்த இறைவன் துணை இருக்க வேண்டும், அவர்கள் அனைவருக்கும் பாதம் தொட்ட நன்றிகள். என் மனம் வயநாடு மக்களை பற்றியே நினைக்கிறது. வாழ்க்கையின் இந்த மோசமான கட்டத்தில் கடவுள் அவர்கள் அனைவருக்கும் தைரியத்தை கொடுக்கட்டும்”என்று குறிப்பிட்டுள்ளார்.