இலங்கையின் பொருளாதாரம் வலுவான பாதையில் – IMF உறுதி!

16.10.2026 15:00:00

சர்வதேச நாணய நிதியம் (IMF) எப்போதும் இலங்கைக்கு அர்ப்பணிப்புடன் கூடிய நம்பகமான பங்காளியாகத் தொடர்ந்து இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் திணைக்களத்தின் துணைப் பிரிவுத் தலைவர் சோனாலி ஜெயின் சந்திரா தெரிவித்துள்ளார்.

 

தாய்லாந்தின் பெங்கொக் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி குழுமத்தின் வருடாந்த கூட்டத்திற்கு இணைவாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் குறித்து விளக்கமளித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதாரம் கடுமையான நெருக்கடிகளிலிருந்து மீண்டு தற்போது வலுவான நிலையை அடைந்துள்ளதுடன், தொடர்ச்சியாக 11 காலாண்டுகளாக நேர்மறையான வளர்ச்சியைக் கண்டுள்ளது.

வருமான விகிதம் இரட்டிப்பாகியுள்ளதுடன், கடன் மறுசீரமைப்புப் பணிகளும் பெரும்பகுதி வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ளன.

தற்போதைய திட்டத்தின் கீழ் இன்னும் இரண்டு மதிப்பாய்வுகள் எஞ்சியுள்ளன. இதில் 7வது மதிப்பாய்வுக்கான பணியாளர் மட்ட உடன்பாடு ஒக்டோபர் தொடக்கத்தில் எட்டப்பட்டுள்ளதுடன், மார்ச் மாத இறுதியில் இறுதி மதிப்பாய்வு நடைபெறவுள்ளது.

தற்போதைய ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதுடன், எதிர்காலத்தில் புதிய நிதியளிப்புத் திட்டம் அல்லது கொள்கை ஆலோசனைகள் என இலங்கைக்கு எந்த வகையிலும் ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியம் (IMF) தயாராக உள்ளது.