இந்தியத் தூதுவருக்கு வாக்குறுதி.

01.10.2024 08:34:23

தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றது.

  

குறித்த சந்திப்பின் போது கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட்டபோது எங்களுக்குக் கசப்பான அனுபவங்கள் உள்ளன. இருந்தாலும் அவை தொடர்பில் பேசி கூட்டாகப் போட்டியிட முயற்சிகள் எடுப்போம் என தமிழரசு, ரெலோ, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய கட்சிகளின் தலைவர்கள் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவிடம் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் நிலைப்பாடு தொடர்பில் இந்தியத் தூதுவர் அவர்களிடம் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

இதன்போது, அவருக்குப் பதிலளித்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், "நாடாளுமன்றத் தேர்தலைத் தமிழ்த் தேசியக் கட்சிகள் தனித்தனியாக எதிர்கொள்வதால் வாக்குகள் சிதறடிக்கப்படும். இதனால், பிரதிநிதித்துவத்தை இழக்காத வகையில் ஒன்றாகப் போட்டியிடவே விரும்புகிறோம். எனினும், இது உடனடியாகச் சாத்தியமில்லை. கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட்ட போது எங்களுக்குக் கசப்பான அனுபவங்கள் உள்ளன. இருந்தாலும் அவை தொடர்பில் பேசி கூட்டாகப் போட்டியிட முயற்சிகள் எடுப்போம்" என குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பித்த இந்தச் சந்திப்பு சுமார் ஒன்றரை மணிநேரம் நீடித்திருந்தது.

இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம், தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் கட்சியின் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.