இன்று முதல் வாகன அனுமதிப் பத்திரங்களை வழங்கும் பணி ஆரம்பம்!

15.10.2021 05:25:41

மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான அனுமதி பத்திரங்களை வழங்கும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் தவிர்ந்த ஏனைய வாகனங்களுக்கு அனுமதி பத்திரங்களை பெற்றுக் கொள்ள முடியும்.

அண்மையில் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இந்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது.

இன்று 15 ஆம் திகதி முதல் இந்த அனுமதி பத்திரங்களை பெற்றுக் கொள்வதற்கு வாகன உரிமையாளர்களுக்கு சந்தர்ப்பம் உள்ளதாக மேல்மாகாண மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த திணைக்களத்தின் இணைய தளத்தில் ஊடாக ஆன்லைன் மூலம் அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் அனைத்து பிரதேச செயலக பிரிவுகளில் ஊடாகவும் அனுமதி பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என மேல் மாகாண ஆளுநர் குணதிலக்க தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்ப முகவர் நிலையத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

ஆகஸ்ட் 12 ஆம் திகதி முதல் காலாவதியான மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகன உரிமையாளர்கள் டிசம்பர் 31 ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ள சலுகைக் காலத்தை இரண்டும் பெற்றுக்கொள்ள முடியும் என மேல் மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.