குற்ற தடுப்பு சட்டமூலத்தை திரும்ப பெற கோருகிறது HRC.
|
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமூலத்தை பயங்கரவாதத்தடைச்சட்டத்தை விட மிகமோசமான சட்டமூலம் விபரித்திருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அதனை வாபஸ் பெற்று, சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
|
|
இதுகுறித்து ஆணைக்குழுவினால் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: எமது ஆணைக்குழு கடந்த 6 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 'ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுத்தல்' எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட சட்டமூலம் தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சருக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை முடிவுக்குக்கொண்டுவருவதை நோக்காகக்கொண்ட சட்டமொன்றின் தேவைப்பாட்டை நாம் ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, அத்தகைய சட்டங்கள் நாட்டின் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் இலங்கை ஏற்றுக்கொண்ட சர்வதேச மனித உரிமைகள் பிரகடனங்களுக்கு ஏற்றவாறு அமையவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம். அதற்கமைய தற்போது முன்மொழியப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமூலத்தின் உள்ளடக்கங்கள், நாட்டின் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனங்கள் என்பவற்றுக்கு முற்றிலும் முரணானவையாக அமைந்துள்ளன. அத்தோடு இச்சட்டமூலமானது 1979 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாதத்தடைச்சட்டத்தை விடவும் மிகமோசமானதாக அமையக்கூடும். இச்சட்டமூலமானது உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தரத்துக்குக் குறையாத பொலிஸ் அதிகாரியிடம் அளிக்கப்படும் வாக்குமூலத்தை சாட்சியமாக ஏற்றுக்கொள்வதற்கு இடமளிப்பதுடன், இச்சட்டமூலத்தின் ஏற்பாடுகள் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் 16 ஆம் பிரிவை மீள நிறுவும் வகையில் அமைந்திருக்கின்றன. இவ்வேளையில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் 16 ஆம் பிரிவைப் பிரயோகித்தல் தொடர்பான எமது முந்தைய அறிக்கைகளையும், குறிப்பாக பொலிஸ் அதிகாரிகளிடம் வழங்கப்படும் வாக்குமூலங்கள் சாட்சியங்களாகக் கொள்ளப்படுவதானது நபர்களை சித்திரவதை செய்வதற்கும், மிகமோசமான நடத்தைகளுக்கு உட்படுத்துவதற்கும் வழிகோலும் என்ற எமது அவதானிப்புக்களையும் மீள நினைவுறுத்துகின்றோம். அதேபோன்று கடுமையான குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரைத் தடுத்துவைப்பதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடமிருந்து தடுப்புக்காவல் உத்தரவைப் பெறுவதற்கு இச்சட்டமூலம் பொலிஸாருக்கு அதிகாரம் அளிக்கிறது. அதுமாத்திரமன்றி இச்சட்டமூலத்தின் 3 ஆம் பிரிவின்கீழ் 'கடுமையான குற்றம்' என்ற பதத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் பரந்துபட்ட வரைவிலக்கணம் குறித்தும் நாம் தீவிர கரிசனையடைகின்றோம். நபரொருவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குழுவின் உறுப்பினரா என்பதைத் தீர்மானிப்பதில் இச்சட்டமூலம் இலங்கைப் பிரஜைகள் மீது மிகப்பரந்துபட்டதும், நியாயமற்றதுமான சந்தேகத்தைப் பிரயோகிக்கின்றது என நாம் கருதுகின்றோம். இவ்வாறானதொரு பின்னணியில் இச்சட்டத்தை முழுமையாக வாபஸ் பெறவேண்டும் என்றும், இதனை நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனங்கள் என்பவற்றுக்கு இணங்கும் வகையில் திருத்தியமைக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்று அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. |