உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உயிரிழப்பு !

18.05.2021 10:41:27

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆயிரத்து 621 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் தினேஷ் சந்திர சர்மா தெரிவிக்கையில், ‘ உடல் நிலை சரியில்லாத ஆசிரியர்களும், அரச ஊழியர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என மே மாதம் முதலாம் திகதி மாநில தலைமைச் செயலர் உறுதியளித்தார்.

ஆனால் உடல்நிலை பாதிப்பு காரணமாக வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடாத ஆசிரியர்கள் மற்றும் அரச ஊழியர்கள் மீது பணியிடை நீக்கம், ஊதிய பிடித்தம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த சூழலில் தேர்தல் பணியில் ஈடுபட்டு கொரோனாவால் உயிரிழந்த ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 1621 ஆக அதிகரித்துள்ளது.

இதில் சிலர் அதீத மன உளைச்சல் மற்றும் மற்றும் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையங்களில் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றவில்லை.

எனவே தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.