
பெண்களின் வன்முறைக்கு எதிரான குரலாக ‘தி மாதர்’
நாம் நாட்டுக் கலைஞர்கள் இயக்கி, நடித்துள்ள ‘தி மாதர்’ (Pilot Film) திரைப்படத்தின் சிறப்புக் காட்சியானது கடந்த சனிக்கிழமை (26) வத்தளையில் அமைந்துள்ள Ram Cinemas திரையரங்கில் ரசிகர்களின் அமோக வரவேற்புடன் திரையிடப்பட்டது.
Windsor Production தயாரிப்பில், பிரவீன் கிருஸ்ணராஜா இயக்கியுள்ள இந்த திரைப்படமானது சமூதாயத்தில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் பாலியல் மற்றும் வன்முறை சம்பவங்களை எடுத்துக் காட்டும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் விக்னேஷன் தேவராஜ், ரூபஷாலினி, கோபி ரமணன், பி.டி. செல்வம், போல்ராஜ், ஜனா, சிபி, ரஷிகா அருட்செல்வம், பிரேம்ஜித், நீல்ரிக்ஷன் உள்ளிட்ட நம் நாட்டுக் காலைஞர்கள் நடித்துள்ளனர்.
கமரா, எடிட்டிங் என அனைத்தும் சிறப்பாக அமையப் பெற்ற இந்தப் படத்துக்கு சஞ்ஜித் லக்ஷ்மன் இசையமைத்து இருக்கிறார்.
சுமார் 40 நிமிட நீளமுடைய இந்த திரைப்படமானது கயவர்கள் கூட்டத்தினால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்படும் தனது மகளுக்காக தந்தையின் பழிவாங்கலையும், சமூதாயத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களையும் பாசப் போராட்டத்துடன் சித்தரித்துக் காட்டுகின்றது.
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை மேற்கொள்ளும் கயவர்கள் கூட்டம் இறுதியில் பெண்களின் கைகளினாலேயே பழிவாங்கப்படுவதும் இயக்குநர் பிரவீன் உள்ளிட்ட குழுவினரின் பாராட்டப்பட வேண்டிய முயற்சியாக அமைந்துள்ளது.