இந்தியா – கனடா உறவுகளில் முன்னேற்றம்!

18.07.2025 15:39:48

ஜி7 உச்சிமாநாட்டில் பேச்சுவார்த்தை
கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கனேடிய பிரதமர் மார்க் கார்னி சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தனர். ஜனநாயக மதிப்புகள், சட்டத்தின் ஆட்சி மற்றும் இறையாண்மைக்கு மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியா-கனடா உறவுகளை வலுப்படுத்துவதன் அவசியத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் “உயர் ஆணையர்களை மீண்டும் நியமிப்பதன் மூலம் உறவுகளில் நிலைத்தன்மையை மீட்டெடுக்க ஆக்கபூர்வமான, அளவீடு செய்யப்பட்ட நடவடிக்கைகளை இரு தரப்பினரும் எடுக்க ஒப்புக்கொண்டுள்ளனர்”  எனத் தெரிவித்துள்ளார்.

பதற்றத்துக்குக் காரணமான சர்ச்சை
ஜூன் 2023இல் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதாக கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் கடுமையான பதற்றம் ஏற்பட்டது.

இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா முழுமையாக மறுத்ததோடு, ஆறு கனேடிய தூதர்களை நாடு கடத்தியது. அதேசமயம் இரு தரப்பிலும் சில ராஜதந்திரிகள் திரும்ப அழைக்கப்பட்டனர்.

புதிய மாற்றம்
இந்நிலையில் கனடாவில் தலைமை மாற்றம் ஏற்பட்டதால் மார்க் கார்னி பிரதமராக பொறுப்பேற்றார். இதையடுத்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளன. வர்த்தகம், டிஜிட்டல் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல துறைகளில் இணைந்து செயல்படுவதற்கான ஆலோசனைகளும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.