பொது வேட்பாளர் பெற்ற வெற்றிகள்
பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தியமை என்பதே முதலாவது வெற்றி. ஏனெனில் ஓர் அரசுடைய தரப்பு வைக்கும் தேர்தலை அரசற்ற தரப்பு எப்படி படைப்புத்திறனோடும் புதுமையாகவும் புத்திசாலித்தனமாகவும் எதிர்கொள்ள முடியும் என்பதற்கு பொது வேட்பாளர் ஒரு முன்னுதாரணம். அரசற்ற தரப்பு ஒன்று அரசாங்கம் நடத்தும் ஒரு தேர்தலை தன்னுடைய கூட்டு விருப்பை வெளிப்படுத்துவதற்கான ஒரு களமாக பயன்படுத்தியது ;அத்தேர்தல் களத்தைத் தேசத்தைத் திரட்டும் ஒரு பயில் களமாகாகக் கையாண்டமை என்பது முதலாவது வெற்றி.
இரண்டாவது வெற்றி, பொது வேட்பாளர் தமிழ் மக்களை ஐக்கியப் படுத்துவதில் முதற்கட்டத் திரட்சியை ஏற்படுத்தியுள்ளார். அரியநேத்திரன் பெற்ற வாக்குகள் மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரம்.அது கடந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகளில் அரைவாசியை விட அதிகம். இந்த அடிப்படையில் அவர் பெற்றது ஒரு தொடக்க வெற்றி. அது ஒரு பிரகாசமான வெற்றி இல்லைத்தான். ஆனாலும் வெற்றி. பொது வேட்பாளரை தமிழ் மக்கள் பொருட்படுத்தவில்லை என்று சுமந்திரன் கூறுகிறார். இரண்டு லட்சத்து 26 ஆயிரம் வாக்காளர்களை அவர் பொருட்படுத்தத் தேவையில்லாத ஒரு கணக்கு என்று கருதுகின்றாரா? இரண்டு லட்சத்து 26 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கொடுக்கும் மதிப்பு அதுதானா?
மூன்றாவது வெற்றி, பொது வேட்பாளர் தாயகத்தில் உள்ள மக்களை கட்சி கடந்து ஒன்று திரட்டியது மட்டுமல்ல, புலம்பெயர்ந்த தமிழர்களையும் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஒன்று திரட்டியுள்ளார். கடந்த 15 ஆண்டுகளிலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் அதிகம் உற்சாகமாகவும் ஆர்வமாகவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தலையீடு செய்த ஒரு தேர்தல் இது. புலம்பெயர்ந்த தமிழர்கள் பொது வேட்பாளரை நோக்கி ஒப்பீட்டளவில் அதிகமாக ஒன்று குவிந்தார்கள். இது மூன்றாவது வெற்றி.
நாலாவது வெற்றி, கிழக்கில் இருந்து வந்த ஒரு வேட்பாளர் வடக்கில் பெற்ற வாக்குகள்.வடக்கையும் கிழக்கையும் சட்டரீதியாக ஏற்கனவே பிரித்து விட்டார்கள் நிர்வாக எல்லைகளின் மூலமும் குடியேற்றங்களின் மூலமும் கிழக்கில் கிழக்கு மையக் கட்சிகளை வளர்த்தெடுப்பதன் மூலமும் வடக்கையும் கிழக்கையும் பிரிக்க முற்படும் சக்திகள் வெற்றி பெற்று வரும் ஒரு காலகட்டத்தில்,கிழக்க்கில் இருந்து ஒரு வேட்பாளர் பொது வேட்பாளராக முன் நிறுத்தப்பட்டார்.அவருக்கு வடக்கில் கிடைத்த ஆதரவு என்பது வடக்கையும் கிழக்கையும் உணர்வுபூர்வமாக பிரிக்க முடியாது என்பதனை உணர்த்தி இருக்கிறது.அதுவும் வடக்கு கிழக்கை சட்ட ரீதியாகப் பிரித்த கட்சியின் தலைவர் அரசுத் தலைவராகத் தெரித்தெடுக்கப்படட ஒரு தேர்தலில். இது ஒரு மகத்தான வெற்றி ஐந்தாவது வெற்றி, ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி. சங்குச் சின்னத்தின் கீழ் ஏழு கட்சிகளும் மக்கள் அமைப்பும் இணைந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டன. மக்கள் அமைப்பு ஒன்றும் கட்சிகளும் இணைந்து அவ்வாறு தேர்தல் நடவடிக்கைகள் ஈடுபட்டமை தமிழ் அரசியல் பண்பாட்டில் ஒரு புதிய போக்கு. அது ஒரு புதிய பண்பாடு. அது ஒரு புதிய பரிசோதனையும் கூட. அந்த ஜனநாயகப் பரிசோதனையில் தமிழ் மக்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு சித்தி பெற்றிருக்கிறார்கள்.
பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது ஜூலை 29 ஆம் தேதி. ஜனாதிபதி தேர்தல் நடந்தது செப்டம்பர் 21 ஆம் தேதி. இடைப்பட்ட சுமார் 50 நாட்கள் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு மிகவும் புதிய ஒரு சின்னத்தை சங்குச் சின்னத்தை வெற்றிச் சின்னமாக மாற்றியது என்பதில் ஒரு செய்தி இருக்கிறது.தமிழ் மக்கள் கூட்டுணர்வோடு வாக்களிக்கும் பொழுது எந்த ஒரு புதிய சின்னத்தையும் ஸ்தாபிக்கலாம் என்பதுதான் அது. இது ஏற்கனவே தமிழ் மக்கள் உதயசூரியன் சின்னத்தை நிராகரித்த பொழுது நிரூபிக்கப்பட்டது. அதன் பின் ஈரோஸ் இயக்கம் சுயேட்சையாகப் போட்டியிட்ட பொழுது கிடைத்த வெற்றியும் அதனை நிரூபித்தது. இப்பொழுது சங்குக்கு கிடைத்த வெற்றியும் அத்தகையதுதான். முற்றிலும் புதிய ஒரு சின்னத்தை 50 நாட்களில் ஸ்தாபிக்க முடிந்தமை என்பது ஒற்றுமையின் விளைவு. ஒற்றுமையின் பலமும் தான்.
ஆனால் இந்த ஒற்றுமை இப்பொழுதும் பலவீனமானதாகவே காணப்படுகிறது பொதுக் கட்டமைப்பு ஒரு பலமான இறுகிப் பிணைந்த கூட்டாக இன்னமும் உருவாகவில்லை. ஒரு ஜனாதிபதித் தேர்தலை நோக்கி கட்சிகளும் மக்கள் அமைப்பும் இணைந்து செயல்பட்டன. இதே இணைந்த செயல்பாடு தொடர்ந்து வரும் தேர்தலிலும் இருக்குமா என்ற கேள்வி உண்டு. கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணம் டில்கோ விடுதியில் நடந்த கூட்டத்தில் அது அது தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்புக்குள் காணப்படும் தமிழ் மக்கள் பொதுச்சபை என்ற மக்கள் அமைப்பானது தொடர்ந்து தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பாக தனது கருத்தை தெரிவிப்பதற்கு சில நாட்கள் அவகாசத்தை கேட்டுள்ளது. அந்த மக்கள் அமைப்பு அதன் பொதுச்சபையைக் கூட்டி அது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
ஒரு மக்கள் அமைப்பு தொடர்ச்சியாக தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து அந்த அமைப்பிடம் தயக்கம் காணப்படுவதாக தெரிகின்றது.தேர்தல் முடிந்த கையோடு தமிழ் மக்கள் பொதுச்சபை ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் தேசத்தைக் கட்டியெழுப்பும் வழியில் தேர்தல் ஒரு பகுதியே தவிர தேர்தல்கள் மூலம் மட்டும் தேசத்தைக் கட்டி எழுப்ப முடியாது என்று தெளிவாகத் திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலை தமிழ் ஐக்கியத்தைக் கட்டி எழுப்புவதற்கான ஒரு களமாக பயன்படுத்துவது என்று கூறிப் பொதுகட்டமைப்பு உருவாக்கப்பட்டது. பொதுக் கட்டமைப்பு எனப்படுவது தமிழ் ஐக்கியத்தின் ஆகப் பிந்திய முயற்சி.
கட்சிகள் தேர்தல்களை எதிர்கொள்வதற்கு தயாராகிவிட்டன.பொதுக் கட்டமைப்புக்குள் அங்கமாக உள்ள ஏழு கட்சிகளும் அது தொடர்பில் கூடி முடிவெடுத்து விட்டதாகத் தெரிகிறது. ஆனால் பொதுக் கட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் பொதுச்சபை என்ற மக்கள் அமைப்பானது அது தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் கூடி முடிவெடுக்க விருப்பதாகத் தெரிகிறது.
ஒரு ஜனாதிபதித் தேர்தலை கையாள்வது வேறு, ஏனைய தேர்தல்களை கையாள்வது வேறு என்ற விளக்கம் பொதுச் சபையிடம் காணப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலை ஒரு தேர்தலாக அல்லாது தமிழ் மக்களை ஒன்று திரட்டுவதற்கான ஒரு பயில் களமாகவே பொதுச்சபை பார்த்தது. அந்த அடிப்படையில்தான் பொதுச்சபை பொதுக் கட்டமைப்புக்குள் இணைந்து தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் முழு அளவுக்கு ஈடுபட்டது. ஆனால் ஏனைய தேதர்கள் அவ்வாறானவை அல்ல. எனவே அந்த தேர்தல் தொடர்பாக முடிவு எடுப்பதற்கு பொதுச் சபை கால அவகாசத்தை கேட்டது.
பொதுச்சபை எனப்படுவது ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி உதயமாகிய ஒரு கட்டமைப்பு.அதற்கு ஐந்து மாதங்கள் தான் வயது.5 மாத வயதான ஒரு கட்டமைப்பு அடுத்தடுத்து வரும் தேர்தல்களுக்கு பதில் வினை ஆற்ற வேண்டியது அவசியமா என்ற கேள்விக்கு விடை இன்று இரவுக்குள் தெரிய வந்து விடும்.