எதிர்க்கும் திருமா!.

28.01.2026 13:14:17

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைக்கும் வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுகவை பொறுத்தவரை தேசிய ஜனநாயகக் கூட்டணிவில் தன்னை இணைத்துக் கொண்டது.. அந்த கூட்டணியில் இல்லாத மற்ற கட்சிகள் திமுக பக்கம் செல்லவிருக்கிறது.. மிஞ்சியிருப்பது தேமுதிகவும், பாமகவும் மட்டும்தான்.

பாமகவை பொறுத்தவரை தற்போது அன்புமணி, மருத்துவர் ராமதாஸ் என இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே அன்புமணி அதிமுக-பாஜக கூட்டணியில் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் எக்காரணத்தைக் கொண்டும் ராமதாஸை இந்த கூட்டணிக்கு கொண்டுவரக் கூடாது என அவர் உறுதியாக சொல்லி விட்டாராம்.

ஏனெனில் ‘நாங்கள் கேட்கும் தொகுதிகளையே அவர்களும் கேட்பார்கள்.. நாங்கள் நிறுத்தும் வேட்பாளர்களை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.. இதனால் கட்சி நிர்வாகிகள் தேர்தலில் வேலை செய்ய மாட்டார்கள்.. குழப்பம் ஏற்படும்’ என அன்புமணி சொன்னதை அதிமுகவும், பாஜக மேலிடமும் ஏற்றுக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

இப்போது பாமகவுக்கு இருப்பது இரண்டே ஆப்ஷன்தான்.. ஒன்று திமுக அல்லது தவெக. ஆனால் பாமக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இடம் பெற மாட்டோம் என திருமாவளவன் இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்து விட்டார்.. எனவே ராமதாஸை தங்கள் கூட்டணிக்கு இழுக்கும் திமுகவின் முயற்சியும் பலிக்கவில்லை.. எனவே ‘நீங்கள் தனித்துப் போட்டியிடுங்கள்’ என திமுக தரப்பில் சொல்லப்பட்டு வருகிறதாம்.

ஆனால் ராமதாஸ் தனித்து போய் போட்டியிடுவாரா அல்லது விஜயின் தவெகவுடன் கூட்டணி வைப்பாரா என்பது தெரியவில்லை.. தவெக என்ன முடிவெடுக்கும், ராமதாஸ் என்ன முடிவெடுப்பார் என்பதை ராமதாஸ் ஆதரவு நிர்வாகிகள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.