அடுத்த பிரதமர் யார்?.
தேவகவுடாவுக்கு பின் தென் மாநிலங்களில் இருந்து ஒருவர் டெல்லிக்கு சென்று பிரதமராக அமரவில்லை. அவருக்குபின் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது அவர் அடுத்த பிரதமராகலாம் என மக்கள் பேசினார்கள். ஆனால் அதுவும் நடக்கவில்லை. அவரும் தனக்கு அதில் ஆர்வமில்லை என சொல்லிவிட்டார்.
சமீப காலமாக சட்டசபையில் பேசும் தவெக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் முதல்வர் ஜோசப் விஜய் கடுமையாக உழைக்கிறார்.. அவருக்கு பிரதமராகும் தகுதி இருக்கிறது என தொடர்ந்து பேசி வருகிறார்கள்.. சில நாட்களுக்கு முன்பு வரும் காலத்தில் தெற்கிலிருந்து ஒருவர் பிரதமராக வர வேண்டும்.. அந்த தலைவர் தமிழகத்திலிருந்து வரவேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தார். அது விஜயை மனதில் நினைத்துதான் என சொல்லப்படுகிறது. ஒருபக்கம் விஜயின் ஆதரவாளர்கள் தமிழ்நாடு முழுவதும் ‘இன்றைய முதல்வர்.. நாளைய பிரதமர்’ என்று போஸ்டர் ஒட்டி வருகிறார்கள்..
இந்நிலையில்தான், 2029 பொது தேர்தலில் மக்களின் பிரதமர் தேர்வாக யாரெல்லாம் இருப்பார்கள் என இந்தியா டுடே மற்றும் சிவோட்டர்ஸ் இணைந்து கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில் நரேந்திர மோடி என 48.7 சதவீதமும், ராகுல் காந்தி என 27.1 சதவீதம் பேரும், ஜோசப் விஜய் என 9.2 சதவீதமும் பேரும் ஆதரவு தெரிவித்தனர். அதாவது, அடுத்த பிரதமர் என்கிற கேள்விக்கு விஜய்க்கு மூன்றாம் இடம் கிடைத்திருக்கிறது.
இது பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. ஏனெனில் மம்தா பானர்ஜிக்கு 2 சதவீதம், அகிலேஷ் யாதவுக்கு 1.7 சதவீதம், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்பேவுக்கு 1.3 சதவீதம், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 1.2 சதவீதமும் பெற்றுள்ள நிலையில் ஜோசப் விஜய் இவர்களை எல்லாரையும் ஓவர்டேக் செய்து 9.2 சதவீதம் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறார்..