துட்டகைமுனு மன்னன் செய்ததை ஏன் உங்களால் செய்ய முடியாது - சிறிதரன் கேள்வி
இந்த நாட்டில் இருந்த துட்டகைமுனு மன்னன்கூட தமிழ் மன்னனான எல்லாள மன்னனுடன் போரிட்டு அந்தப் போரில் தான் வென்ற பின்னர் எல்லாளனுக்கு சமாதி அமைத்து வணக்கம் செலுத்துங்கள் என்று சொன்ன சிங்கள வீர வரலாற்றைக்கொண்ட நாட்டில் துட்டகைமுனு மன்னன் செய்ததை ஏன் உங்களால் செய்ய முடியாது?
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில்நேற்று நடைபெற்ற பெருந்தோட்ட அமைச்சு, காணி அமைச்சு மற்றும் மூன்று இராஜாங்க அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றியபோதே மாவீரர்களை நினைவுகூர்ந்ததுடன் இவ்வாறு கேள்வி எழுப்பி ஸ்ரீதரன் மேலும் பேசுகையில்,
“கார்த்திகை 27 தமிழர்களின் மாவீரர் நாள். இந்தப் பூமிப்பந்தின் தேசமெங்கும் பரந்து வாழும் உலகத் தமிழர்கள் அத்தனை பேரினதும் ஆழ்மன உணர்வுகளோடு இரண்டறக் கலந்துபோன ஈகைத்திருநாளே மாவீரர் நாளாகும். மக்களுக்கான போராட்டம் ஒன்றின் தோற்றுவாய்க்கு மனிதாபிமான மனோ நிலையும் மனித நிலை மாண்புகளுமே அடிப்படையாக அமைய முடியும். அத்தகையதோர் மக்கள் போராட்டத்துக்கு சக மனிதர்களையும் தன் சார்ந்த சமூகத்தையும் நேசிக்கத்தக்க அன்பின்பாலான மனோ நிலை மட்டுமே மூலாதாரமாக முடியும்.
அந்தவகையில் அனைத்துலகும் பிரமித்து நிற்கத்தக்க பிரம்மாண்டத்தோடு தமிழின விடுதலை ஒன்றையே மூச்சாகவும் வீச்சாகவும் கொண்டு 30 ஆண்டு காலமாக நடைபெற்று முடிந்த மக்கள் போராட்டத்துக்காக தம்மையே தாரைவார்த்த எமது தேசத்து வீரர்களை பயங்கரவாதிகள் என்று விளித்துப் பறைசாற்றுவது எத்தனை அபத்தமானது என்பதனை நான் இந்த இடத்தில் கேட்க விரும்புகின்றேன்.
அதேபோல் நீண்ட நெடிய நெருப்பாறாய் நிகழ்ந்தேறிய போரின் விளைவாக பொருளாதார ரீதியாகவும் வேலைவாய்ப்பு, கல்வி, கலை, கலாசார, மொழி, இன அடையாள ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு உறவுகளின் உயிரிழப்பு, அவய இழப்பு, மாற்றுத்திறனாளிகளின் உருவாக்கம், ஆயிரக்கணக்கான விதவைகளின் தோற்றம், அன்னை, தந்தையை இழந்த நிலையில் அநாதரவாக்கப்பட்ட சிறுவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், இன்னும் விடுவிக்கப்படாத நிலங்கள், வன்பறிப்பு செய்யப்படும் பூர்வீக நிலங்கள் என வலி தாங்கிய இனமாக வாழத்தலைப்பட்டிருக்கும் எமது மக்களின் மணக்காயங்களுக்கும் அவர்களின் ஆற்றாமைகளுக்கும் ஆறுதல் அளிப்பதாய், அமைதி தருவதாய், நம்பிக்கை ஊட்டுவதாய் அமையக்கூடியது இறந்தவர்களை நினைவுகூரும் உரிமை ஒன்றேயாகும்
அந்த அடிப்படை உரிமையைக்கூட வலிந்து மறுதலிக்கும் அரசின் செயற்பாடுகள் இந்த மண்ணில் எமது மக்களின் இருப்பை இன்னும் இன்னும் கேள்விக்குட்படுத்துவதாகவே அமைகின்றது. இழப்பின் வலி சுமந்து நிற்கும் ஒரு இனத்தின் ஒவ்வொரு குடும்பத்தவர்களினதும் சமய, சமூக, பண்பாட்டு விழுமியங்களைத் தழுவிய நினைவுகூரல் எனும் அடிப்படை உரிமைக்கான பிரார்த்தனைகளையும் சமய சடங்குகளையும் மேற்கொள்கின்றபோது அவை உள்ளூர் அதிகாரத்துவம் உள்ள அதிகாரிகளால் பயங்கரவாத விடயங்களோடு ஒத்துப்பார்க்கப்படுதல் அல்லது போராட்டம் ஒன்றை மீள உருவாக்கம் செய்வதற்கான முனைப்பாக காண்பிக்கப்படுத்தல், அத்தகைய பிரார்த்தனைகளில் ஈடுபடுபவர்களைக் கோரமான உணர்வுகளைக் கொண்டவர்களாகச் சித்திரித்து அவர்களைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்தல் என்பன தவறான அர்த்தப்படுத்தல்களாகும்.
எமது மாவீரர்களின் உயிர்த் தியாகங்களையும் மாவீரர் தினத்தின் புனிதத் தன்மையயையும் வலிந்து மலினப்படுத்தும் செயலாகவே இது அமைகின்றது. இன விடுதலை என்னும் சத்திய இலட்சியத்துக்காக, தமிழ்ச் சமூகத்தின் விடிவுக்காக, அடுத்த சந்ததியின் அமைதியான வாழ்வுக்காக வாழ்வியலின் அத்தனை சுகபோகங்களையும் துறந்து மனித சுதந்திர உணர்வின் பிரதிபலிப்பாய் தம்மையே தற்கொடையாக்கி 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களை இந்த மண்ணிலே புதைத்துவிட்டு விடுதலையை நோக்கிய ஆழ் மன ஏக்கங்களோடு தவித்திருக்கும் எமது மக்களின் வலி சுமந்த மனப்பரப்பின் முழுமைக்கும் மாவீரர்களின் தியாகங்கள் என்றென்றைக்கும் சுடர்ந்த வண்ணம்தான் இருக்கும்.
கையறு நிலையில் இருக்கும் எமது மக்கள் அரூபத் தன்மை கொண்ட ஆபத்பாந்தவர்களாக ஆழ் மனதில் வைத்து பூஜிக்கும் மாவீரர்களின் நினைவுகளை நீதிமன்றத் தடை உத்தரவுகளாலும் நீண்டிருக்கும் ஆயுத முனைகளினாலும் நீர்த்துப்போகச் செய்ய முடியாது என்பதனை நீங்கள் ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பீர்கள்.
தமது சொந்த மண்ணிலேயே அடிப்படை உரிமை இழந்த நசுக்கப்பட்ட இனமாக இருந்துகொண்டு தனது இருப்பை தக்க வைப்பதற்காக எல்லா வழிகளிலும் போராடத் தலைப்பட்டுள்ள தமிழினத்துக்கு இத்தகையதோர் இழிநிலை வந்துவிடக்கூடாது என்ற வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு விடுதலை என்பது ஓர் அக்கினிப் பிரவேசம். நெருப்பு நதிகளை நீந்திக்கடக்கும் நீண்ட பயணம். அது தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம்.
இந்த நாட்டிலே ஜே.வி.பிக்கும் தங்களுடைய இழந்துபோன வீரர்களை அவர்கள் நினைவுகூருவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் யாருக்கும் இதில் தடையில்லை. இந்தச் சபையில் எதிர்க்கட்சிகள் கூட இறந்துபோனவர்களை நினைப்பதற்கான தடையை விதிக்க வேண்டாமெனனக் கூறின. ஏன் இந்த நாட்டில் இருந்த துட்டகைமுனு மன்னன் கூட எல்லாள மன்னனுடன் போரிட்டு அந்தப் போரில் தான் வென்ற பின்னர் எல்லாளனுக்குச் சமாதி அமைத்து வணக்கம் செலுத்துங்கள் என்று சொன்ன சிங்கள வீர வரலாற்றைக்கொண்ட நாடுதான் இந்த நாடு. போர் வீரர்களை மதிக்கின்ற நாடு. ஆகவே, ஒரு போரில் ஒருவர் இறந்திருந்தால் அவரை மதிக்கின்ற பக்குவம் உங்களுக்கு வர வேண்டும். அந்தப் பக்குவம் இருக்கின்ற நாடுதான் நியாயமான கருத்துக்களை கருத்துக்களால் வெல்கின்ற அடுத்த இனத்தின் கருத்துக்களை ஏற்றுக்கொள்கின்ற பக்குவமுள்ள நாடாக இருக்க முடியும்.
இது பயங்கரவாதம் அல்ல. நான் உண்மையை உங்களுக்குச் சொல்கின்றேன். இந்த நாட்டில் நடக்காத ஒன்றை நான் சொல்லவில்லை. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் துட்டகைமுனு மன்னன் செய்ததை ஏன் உங்களால் செய்ய முடியாது?” – என்று கேள்வி எழுப்பினார்.