பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றார் அனுர!

23.11.2024 09:00:00

தாய்நாட்டை சிறந்த நாடாக மாற்றுவதற்கு ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைத்து அரச ஊழியர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றேன் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

  

அக்குரேகொட பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு அமைச்சராக நேற்று முற்பகல் கடமைகளைப் பொறுப்பேற்ற போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு அங்கிருந்த ஊழியர்களினால் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் முப்படைகளின் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் பிரதானிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடினார்.

சிறந்த ஆட்சியை உருவாக்குவதற்காக புதிய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் அனைவரினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.