மகாவலி எல் வலயம் என்பது தமிழர்களுக்கான மரண பொறி

08.05.2024 16:00:31

மகாவலி எல் வலய திட்டமானது தமிழர்களுக்கான மரண பொறி ஆகும் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். 

 

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

  முல்லைத்தீவு சிலாவத்துறை தெற்கு, தியகு நகர் கிராம மக்கள் தங்கள் பிரச்சனைகள் தொடர்பில் ஆளுநரிடம் இன்றைய தினம்  மகஜர் கையளித்தனர். 

அப்பகுதி மக்களை குடியேற்றம் செய்து 50 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.தற்போது அது பெருத்த கிரம்மாக மாறியுள்ளது. அந்த காணி ஒரு பங்கு தந்தைக்கு உரியது. இதனை தற்போது பங்கு தந்தை அந்த காணியை வேறு நிறுவனத்திற்கு விற்பனை செய்து விட்டனர். காணியை வாங்கியவர்கள் அப்பகுதியில் குடியேறியுள்ள மக்களை வெளியேற்ற முயற்சிக்கின்றனர். 

2018ஆம் ஆண்டு கால பகுதியில் வடமாகாண சபையில் கூட பேசி இருந்தேன். பிரதேச செயகலம் அந்த விடயங்களில் தலையிட்டு இந்த மக்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும்.

காணி பிரச்சனை ஒரு பக்கம் என்றால் மற்ற பக்கம் சட்டவிரோத மீன்பிடியால், அவர்களின் தொழிலும் பாதிப்பு.

அங்கு 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன. அவர்களின் வாழ்வாதரங்கள் பாதுகாக்கப்பட்டு, அவர்களின் நிலவுரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டும். இதற்காக மாவட்ட செயலர் மற்றும் பிரதேச செயலர் ஆகியோர் தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

அதேவேளை மகாவலி எல் வலயத்தால் எமக்கு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது தொடர்பில் விளக்கமாக  வடமாகாண ஆளுநருக்கு தெரிவித்துள்ளோம் என மேலும் தெரிவித்தார். 

அதேவேளை, எமது வயல் நிலங்களை சிங்கள கோடீஸ்வரர்களுக்கு 99 வருட குத்தகைக்கு வழங்கியுள்ளனர். மகாவலி எல் வலயம் என 80 களில் இருந்து இன்றுவரை எமது பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டே வருகின்றது. இதுவரை 2500 ஏக்கருக்கு மேல் பறிபோயுள்ளது. எமது ஊர்மனைக்களை அண்மித்தே சிங்கள மக்களை குடியேற்றி வருகின்றது.

மகாவலி எல் வலயம் என தமிழ் மக்களுக்கு பயன் தரும் காணிகள் பறிக்கப்பட்டு, சிங்கள மக்களுக்கு வழங்கப்படுகிறது. கொக்குளாய் , கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி மக்கள் விவசாயத்தில் தன்னிறவை பெற்று வந்தனர். அவர்களின் காணிகள் பறிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இன்று தமிழ் மக்கள் விவசாயத்திற்கு காணிகள் இன்றி காணப்படுகின்றன.

மகாவலி கோட்டக்கேணி விநாயகர் ஆலயத்தில் அருகில் உள்ள காடுகள் பாரிய இயந்திரங்கள் ஊடாக ஏக்கர் கணக்கில்  அழிக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சிங்கள கோடீஸ்வரர் ஒருவருக்கு 25 ஏக்கர் காணி தமிழ் மக்களுகளின் காணி பறிக்கப்பட்டது என பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.