நாணய நிதியத்தின் மத்திய ஆண்டு மாநாடு ஆரம்பம்!
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் மத்திய ஆண்டு மாநாடு அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.
இதன்போது, நாட்டின் கடன் மறுசீரமைப்பு செயல்முறையை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான பயனுள்ள கலந்துரையாடலில் பங்கேற்கத் தயாராக உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்
பங்காளித்துவம் மற்றும் கூட்டு முயற்சிகள் மூலம் இந்த மாநாடு இலங்கை பிரகாசமான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு தேவையான சூழலை உருவாக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாறிவரும் உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் சூழலால் ஏற்படும் பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கும் அதனை நோக்கிய நமது பயணத்தில் எழும் பிரச்சனைகளை எதிர்கொள்ளவும் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் பரந்த பொருளாதார ஒத்துழைப்பில் ஏனைய பங்காளிகளுடன் இணைந்து செயற்படுவதே இலங்கையின் முதன்மை நோக்கமாகும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.