விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமணம் உறுதி!
நடிகர்கள் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா ‘கீதா கோவிந்தம்’ படத்திலிருந்து காதலித்து வருவதாக தகவல் வெளியானது. இதன் அடுத்தக்கட்டமாக அவர்கள் திருமணம் செய்ய போகிறார்கள் என்ற செய்தி ஓராண்டுக்கு மேலாக பரவி வருகிறது. இருப்பினும் இது குறித்து அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த சூழலில் தான் அவர்களின் திருமண பத்திரிகை ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அதன்படி, வரும் பிப்ரவரி 26 ஆம் திகதி விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா இடையிலான திருமணம் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் அரண்மனையில் நடைபெற இருப்பதாக அந்த திருமண பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திருமண பத்திரிகையானது, திரையுலக பிரபலங்களுக்கும், அரசியல் பிரபலங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
26 ஆம் திகதி ராஜஸ்தானில் நடைபெறும் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமணத்தில் இரு தரப்பு குடும்ப உறுப்பினர்களும், நெருங்கி உறவினர்களும் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து வரும் மார்ச் 4 ஆம் திகதி ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா ஹோட்டலில் இருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற இருப்பதாக திருமண பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இது அதிகாரபூர்வ திருமண பத்திரிகையா? என்பது குறித்து இன்னும் உறுதியாக தெரியவில்லை. முன்னதாக விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இரண்டு தரப்பு குடும்பங்கள் மட்டுமே பங்கேற்ற நிகழ்ச்சியில் மிகவும் சிம்பிளாக மோதிரம் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது திருமண வேலைகளில் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தேவரகொண்டாவை பொறுத்தவரை, அவர் நடிப்பில் கடைசியாக ‘கிங்கடம்’ படத்தில் நடித்தார். அடுத்து அவர் நடிப்பில் ‘ரவுடி ஜனார்தன்’, ‘கிங்கடம் பார்ட் 2’, ‘கல்கி 2898 ஏடி’ ஆகிய படங்கள் உள்ளன. ராஷ்மிகாவை பொறுத்தவரை ‘காக்டெய்ல்-2’, மைசா, புஷ்பா-3: தி ராம்பேஜ், அனிமல் பார்க், பார்டர்-2 போன்ற படங்களில் நடிக்க இருக்கிறார்.