முதன்முறையாக தமிழகத்தை தீவிரமாகக் குறிவைக்கும் பா.ஜ.க!
தமிழக சட்டசபைத் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இன்றைய தினம் தேர்தல் ஆணையாளர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொண்டு தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்யவுள்ளனர்.
இதற்கிடையே தற்போது ஆளும் கட்சியான அ.தி.மு.க.வும், எதிர்க்கட்சியான தி.மு.க.வும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. கட்சியும், சிறையில் இருந்து விடுதலையாகி தமிழகம் திரும்பிய சசிகலாவுக்குக் கிடைத்த அமோக வரவேற்புடன் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்தத் தேர்தலில் சிறைத் சசிகலாவின் வருகை அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணிக்கு பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி மூன்று முறை தமிழகம் வருவதற்குத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தேர்தலில் பா.ஜ.க. முதன்முறையாக அதிக தீவிரம் காட்டி வருகின்றது. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டாலும் அக்கட்சி தனிப்பட்ட செல்வாக்கையும் தமிழகத்தில் வளர்க்க முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.
மோடியின் வருகை தமிழர்கள் இடையே பா.ஜ.க.வின் செல்வாக்கை அதிகரிக்கும் வகையில் அமையும் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழக சட்டசபைக்கு மே மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் 234 சட்டசபைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படும். தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதி, அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா ஆகியோர் இல்லாத நிலையில் நடைபெறும் முதல் சட்டசபைத் தேர்தல் இதுவென்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.