போர் விமானங்களை அனுப்பிய வடகொரியா

04.11.2022 12:20:54

வடகொரியா, தென்கொரியா இடையே தீராப்பகை உள்ளது. வடகொரியா அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட வேண்டும் என்று ஓங்கிக்குரல் கொடுக்கிற அமெரிக்காவுக்கு உற்ற தோழனாக தென்கொரியா உள்ளது. அமெரிக்காவும், தென்கொரியாவும் ஆண்டுதோறும் நடத்தி வருகிற கூட்டுப் போர்ப்பயிற்சி, வடகொரியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு பதிலடி தருகிறவிதத்தில் ஒரே நாளில் அந்த நாடு 23 ஏவுகணைகளை ஏவி சோதித்தது. தென்கொரியாவும் 3 ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்தது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் எல்லைபகுதியில் தென் கொரிய ராணுவம் இன்று நான்கு மணி நேர இடைவெளியில் ஏராளமான வட கொரிய போர் விமானங்களைக் கண்டறிந்தது. இதை தொடர்ந்து 80 போர் விமானங்களைச் சுற்றி வளைத்ததாக கூறி உள்ளது. தென்கொரியா ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை (உள்ளூர் நேரப்படி) சுமார் 180 வட கொரிய ராணுவ விமானங்களை கண்டறிந்தோம். தென் கொரிய இராணுவம் மேலும் 3 குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதையும் கண்டறிந்து உள்ளது.ஏவுகணை ஒன்று தென் கொரியாவின் கடல் பகுதிக்கு அருகில் தரையிறங்கியது. கொரிய எல்லையில் ஏற்கனவே கொந்தளிப்பான சூழ்நிலைக்கு மத்தியில் இது மேலும் பதட்டத்தை அதிகரித்து உள்ளது. தென் கொரிய பாதுகாப்பு மந்திரி லீ ஜாங்-சுப், பிற பிராந்திய நட்பு நாடுகளுக்கு எதிராக எந்த வகையான அணு ஆயுதத்தையும் பயன்படுத்தினாலும் கிம் ஜாங் உன்னின் ஆட்சி முடிவுக்கு வரும் என்று எச்சரித்தார்.