’உறுமய’ திட்டத்தை விரைவுபடுத்த நடமாடும் சேவை
நாட்டில் 20 லட்சம் பேருக்கு காணி உறுதிகளை வழங்குவதற்கான 'உறுமய' தேசிய வேலைத்திட்டத்தினை துரிதப்படுத்தும் வகையில், இம்மாதம் 26 – 30 ஆம் திகதி வரையில் நாடளாவிய ரீதியில் நடமாடும் சேவையொன்றை நடத்த ஜனாதிபதி அலுவலகம் தீர்மானித்துள்ளது.
அதன்படி காணி உறுதிகளை வழங்குவதற்கான சகல துறைசார் அதிகாரிகளையும் கிராமங்களுக்கு அனுப்பி அவர்கள் ஊடாக விரைவாக காணி உறுதிகளை பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளோம் என ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் சந்திரா ஹேரத் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உறுமய திட்டத்தின் கீழ் பெருமளவான காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வேலைத்திட்டத்ததை விரைவுபடுத்தும் நோக்கில் நடமாடும் சேவையொன்றையும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி இம்மாதம் 26 – 30 திகதி வரையில் இந்த நடமாடும் சேவை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்போது காணி உறுதிகளை மக்களுக்கு வழங்குதற்காக சகல அதிகாரிகளும் நடமாடும் சேவையில் பங்கெடுப்பர். உறுதியை பெற்றுக்கொள்ள வருவோர் அவர்களின் பழைய உறுதிகள் அல்லது அனுமதி பத்திரங்களை அதிகாரிகளிடத்தில் ஒப்படைப்பதை மாத்திரமே செய்ய வேண்டும் என்றார்.