ரணிலின் தந்திரத்தில் தவிக்கும் தமிழர் அரசியல் .....!!!
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ல்ஸின் முடிசூட்டு விழாவில் பங்கேற்பதற்காக பிரித்தானியாவுக்கு பயணித்த சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் மீண்டும் இன்று(8) நாடு திரும்பியுள்ளார்.
லண்டனில் வைத்து அவர் புலம்பெயர் தமிழ் புத்திஜீவிகள் என தம்மை அழைக்கும் சில முகங்களுடன் பேச்சுக்களை நடத்தி இருந்தார்.
அதன் பின்னர் இந்த வாரம் கொழும்பில் மேற்கொள்ளவுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்புக் குறித்தும் அவர் அவர்களிடம் சிலாகித்து, இப்போது நாடு திரும்பிருக்கிறார்.
ரணிலின் தந்திரங்கள்
ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்த சிலரை வடக்கு கிழக்கு உட்பட்ட மாகாணங்களின் ஆளுநர்களாக நியமிப்பதற்கு அவர் நகரத் தலைப்படும் நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் சிறிலங்காவில் உள்ள இந்தியாவின் முதன்மை இராஜதந்திரியான கோபால் பாக்லே பேச்சுக்களை நடத்தி இருக்கின்றார்.
இந்த வாரம் சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் வடக்கைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்புக்கு நாள் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தச் சந்திப்பும் இடம்பெற்றிருக்கின்றது.
இதற்கிடையே, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு உட்பட்ட பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடிக்கொள்வதற்காக ரணில் விடுத்த அழைப்பு இப்போது தமிழ் தேசியக் கட்சிகளை சற்று தள்ளாட வைக்கின்றது.
ரணிலின் தந்திரங்களால் தமிழ் தேசியக் கட்சியின் முகங்கள் இப்போது தமக்கிடையில் மீண்டும் ஒருமுறை குடுமிப் பிடிகளை நகர்த்த தடைப்படுகின்றன.
இந்த வருடத்தின் இறுதிக்குள் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண தான் விரும்பினாலும், தமிழர் தரப்பு அந்த விடயத்தில் விலகிச் செல்வதான தோரணையில் ரணில் தனது மே தின உரையில் சில விசனங்களை முன்வைத்த நிலையில், அவரது அந்த விசனங்களுக்கு தோதாக தமிழ் தேசியக் கட்சி உறுப்பினர்களின் அறிவிப்புகளும் உள்ளன.
இந்தப் பேச்சுக்கு கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாததால், இந்த பேச்சுவார்த்தையை தாம் புறக்கணிக்கப் போவதாக தமிழரசுக் கட்சி தவிர்ந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் அறிவித்துள்ளன.
கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் இந்தப் புறக்கணிப்பு பாட்டுக்கு தமிழரசுக் கட்சி கட்சியிலிருந்து சுமந்திரன் அறிவிப்பு வந்திருக்கின்றது. இதன்படி, தமிழரசுக் கட்சி இந்தப் பேச்சுக்களில் பங்குபற்றப் போவதாக தெரிகின்றது.