மீண்டும் ஒருமுறை வரலாறு படைத்திருக்கிறார்... நீரஜ்

24.07.2022 10:57:54

உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற ஆண் தடகள வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார். பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

அமெரிக்காவின் ஓரிகான் மாநிலம் யூஜின் நகரில் சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஈட்டி எறிதல் பிரிவில், இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் மற்றும் முதல் ஆண் தடகள வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார். அவரது வெற்றியை நாடு முழுவதும் கொண்டாடிவருகின்றனர். சர்வதேச போட்டியில் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மீண்டும் ஒரு முறை வரலாறு படைத்திருக்கிறார் நீரஜ் சோப்ரா! உலகத் தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வெல்லும் இரண்டாம் இந்தியர் மற்றும் முதல் இந்திய ஆண் தடகள வீரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் அவருக்கு என் பாராட்டுகள். உலக அரங்கில் நீரஜ் சோப்ரா தொடர்ந்து சாதித்து வரும் உயர்சிறப்பான சாதனைகளால் இந்தியா பெருமையடைகிறது' என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.