துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை ஜப்பானுக்கு தாரைவார்க்க திட்டம்

07.12.2022 00:27:32

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி பணிகளுக்காக ஜப்பானிடம் வழங்கவுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற 2022 ஆம் ஆண்டிற்கான இலங்கை பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அதிபர் இதனைத் தெரிவித்தார்.

பிரதான போக்குவரத்து பரிமாற்று மையம்

மேலும் உரையாற்றிய அவர், “இலங்கையை பிரதான போக்குவரத்து பரிமாற்று மையமாக மாற்ற வேண்டும். கடந்த காலங்களில் கிழக்கு முனையத்தை அபிவிருத்திக்காக கொடுக்க முன்வந்தபோது பல வாக்குவாதங்களும் பிரச்சினைகளும் எழுந்தன.

இலங்கையை நான் விற்கப் போவதை போல் அனைவரும் நடந்துகொண்டனர்.

தெற்காசியாவில் மிகவும் பரபரப்பான துறைமுகமாக கொழும்பு துறைமுகம் இருக்க வேண்டும். கொழும்பு துறைமுகத்தை ஜா-எல துறைமுகம் வரை விஸ்தரிக்க தற்போது திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கான வசதிகள் செய்யப்படும்.

இலங்கையின் சிறந்த துறைமுகங்களாக தற்போது ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகங்கள் திகழ்கின்றன.

விவசாயத்துறை

இலங்கையின் விவசாயத்துறை நவீன படுத்தப்பட வேண்டும். அதற்கு பெரிய அளவிலான தொழில்நுட்பம் தேவைப்படுகிறது.

இலங்கையின் பொருளாதாரம் மற்றும் மக்களின் அதிகபட்ச நன்மைக்காக நாட்டில் உள்ள நிலங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.

சவால்களை சந்தித்து நாம் புதிய யோசனைகள் மற்றும் திட்டங்களுடன் முன்னோக்கி பயணிக்க வேண்டும்.

அரசாங்கத்தின் நீண்ட கால திட்டங்கள் கலந்துரையாடல்களுக்காக முன்வைக்கப்படும். எம்மால் முன்வைக்கப்படும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மாற்று திட்டங்களை முன்வைக்க வேண்டும்.

கடன் மறுசீரமைப்பு

சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை தாமதமானதற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடைபெற்றமையே காரணம். மாநாடு நிறைவடைந்துள்ளதால், பேச்சுவார்த்தைகள் துரிதப்படுத்தப்படும்.

அடுத்த வருடம் சீனாவுடனான கடனை மறுசீரமைக்க எதிர்பார்த்துள்ளோம். இலங்கையுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவிற்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.

இதன் பிரகாரம், அடுத்த வருடம் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து ஊழியர் மட்ட கடன் தொகையை பெற்றுக்கொள்ள முடியும்.