ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கை வருகை தந்த ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று புதன்கிழமை (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த ஈரான் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகவும் சிநேகபூர்வமாக வரவேற்றார்.
ஈரான் அதிபருக்கு முப்படையினரின் 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு மரியாதை அளிக்கப்பட்டது.
இருநாட்டு ஜனாதிபதிகளும் இரு நாடுகளின் தூதுக்குழுவை அறிமுகப்படுத்திய பின்னர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஈரான் ஜனாதிபதி தலைமையிலான குழுவினரை ஜனாதிபதி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்.
தனது விஜயத்தைக் குறிக்கும் வகையில், ஜனாதிபதி ரைசி, ஜனாதிபதி அலுவலகத்தின் சிறப்பு விருந்தினர் புத்தகத்தில் நினைவுக் குறிப்பையும் பதிந்தார்.
தலைவர்களுக்கிடையிலான சுமூகமான கலந்துரையாடலின் பின்னர், இருதரப்பு கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டன.
ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான முறையான இராஜதந்திர உறவுகள் 1962 இல் ஆரம்பிக்கப்பட்டது. முறையான இராஜதந்திர உறவுகளை நிறுவுவதற்கு முன்பே இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் முன்னெடுக்கப்பட்டன. முந்தைய பாரசீக காலத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் முக்கியமாக ஹோமூஸ் ஜலசந்தி வழியாக நடத்தப்பட்டன. ஈரான் தனது தூதரகத்தை 1975 இல் கொழும்பில் நிறுவியது.
இலங்கை தனது தூதரகத்தை தெஹ்ரானில் ஜனவரி 1990 இல் நிறுவியது. இரு நாடுகளும் அனைத்து துறைகளிலும் நெருக்கமான ஒத்துழைப்பைப் பேணுவதுடன், பலதரப்பு உறவுகளில் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்கின்றன.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருநாட்டு ஜனாதிபதிகளும் ஆராய்ந்தனர்.
அத்துடன், கடந்த காலத்தில் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் பின்னர் இலங்கையின் கடன் மறுசீரமைப்புச் செயற்பாட்டிற்கு ஈரான் இஸ்லாமியக் குடியரசு வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஈரான் ஜனாதிபதிக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
இலங்கையின் அண்மைய பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் மீட்சி குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஈரானிய ஜனாதிபதிக்கு விளக்கமளித்ததுடன், இலங்கையின் எதிர்கால முன்னேற்றம் மற்றும் சுபீட்சம் தொடர்பில் ஜனாதிபதி ரைசி தனது வலுவான நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துதல், அரசியல் மற்றும் கலாச்சார ஒத்துழைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர ஆர்வமுள்ள முக்கிய துறைகள் குறித்தும் இருநாட்டுத் தலைவர்கள் நீண்ட நேரம் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இதன்பின்னர், இலங்கைக்கும் ஈரான் இஸ்லாமிய குடியரசிற்கும் இடையிலான 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், இரு நாட்டுத் தலைவர்களின் முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் கையெழுத்திடப்பட்டன.
ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தேசிய நூலகம் மற்றும் ஆவணக் காப்பகத்திற்கும் இலங்கையின் தேசிய நூலகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கையின் சார்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கையொப்பமிட்டதுடன், கலாசார அலுவல்கள் அமைச்சர் மொஹமட் மெஹ்தி இஸ்மாயில்(Mohammad Mehdi Esmaeili),ஈரான் இஸ்லாமி குடியரசின் சார்பில் கைச்சாத்திட்டார்.
இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் மற்றும் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் கலாச்சார மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல் அமைச்சிற்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் கலாச்சார விவகார அமைச்சர் முஹம்மது மெஹ்தி இஸ்மாயில் (Mohammad Mehdi Esmaeili) ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் ஊடகத்துறை மற்றும் சுற்றுலாத்துறையில் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டதோடு இலங்கையின் சார்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவும் ஈரான் இஸ்லாமிய குடியரசின் சார்பில் ஈரான் எரிசக்தி அமைச்சர் அலி அக்பர் மெஹ்ரா (Ali Akbar Mehra Biyan) பியான் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இலங்கைக்கும் ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கும் இடையிலான கலாச்சார, விஞ்ஞான, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, வெகுஜனஊடகம், இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை தொடர்பான உடன்படிக்கையில் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியும் ஈரானின், கலாச்சார விவகார அமைச்சர் முஹம்மது மெஹ்தி இஸ்மாயில் (Mohammad Mehdi Esmaeili) ஆகியோர் கையெழுத்திட்டனர்.
ஈரான் கூட்டுறவுச் சபைக்கும் இலங்கை தேசிய கூட்டுறவுச் சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டதுடன் இலங்கை அரசாங்கம் சார்பில் இலங்கை தேசிய கூட்டுறவு சபையின் தலைவர் ஜி.வி. சரத் வீரசிரி மற்றும் ஈரான் இஸ்லாமிய குடியரசின் சார்பாக ஈரான் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் மொஹமட் மெஹ்தி இஸ்மாயில் (Mohammad Mehdi Esmaeili) ஆகியோர் கையொப்பமிட்டனர்.
அமைச்சர்களான பவித்ரா வன்னியாராச்சி, பிரசன்ன ரணதுங்க, காஞ்சன விஜேசேகர, நளின் பெர்னாண்டோ, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.