'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்.

02.01.2026 14:19:00

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தற்போது கருத்துச் சுதந்திரத்தையும் நபர்களின் தனியுரிமையையும் அச்சுறுத்தலுக்குள் தள்ளக்கூடிய பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் எனும் மிக மோசமான சட்டத்தைக் கொண்டுவர முயற்சிக்கின்றது. இதன்மூலம் தற்போதைய அரசுக்கும் நெறியியல் மற்றும் அறநெறிசார் சட்டபூர்வத்தன்மை இல்லை என்பது தெளிவாகியுள்ளதாக கிறிஸ்தவ பாதிரிமார்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் 61 பேர் கூட்டாகக் கரிசனை வெளியிட்டுள்ளனர்.

தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச் சட்டத்துக்குப் பதிலாக 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்' எனும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதனை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்டவரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருப்பதுடன், அதுபற்றிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு அனுப்பிவைக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவித்துள்ளார்.

இந்நிலையில் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு தொடர்பில் தமது கரிசனைகளையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தி அருட்தந்தை மா.சத்திவேல், அருட்தந்தை டெரன்ஸ் பர்ணாந்து, அருட்தந்தை எஸ்.விமலசேகரன், அருட்தந்தை மனுவேல் பிள்ளை டேவிட், அருட்சகோதரி தீபா பர்ணாந்து, செனாலி பெரேரா, சேனக்க பெரேரா, ருக்கி பர்ணாந்து ஆகியோர் உள்ளடங்கலாக அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் (கிறிஸ்தவர்கள்) அடங்கிய 61 பேரின் கையெழுத்துடன் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு அனுப்பிவைத்துள்ள மகஜரில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பன வரலாற்று ரீதியாக, பயங்கரவாதத்தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்காகவோ அல்லது அச்சட்டத்துக்குப் பதிலீடாக முன்னைய அரசாங்கங்களினால் முன்வைக்கப்பட்ட 'பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை' நிராகரிப்பதற்காகவோ மாத்திரம் போராடிய இயக்கங்கள் அல்ல.

மாறாக அவர்களது அரசியல் நிலைப்பாடானது, புதிதாக எந்தவொரு அடக்குமுறை சட்ட வடிவங்களும் கொண்டுவரப்படக்கூடாது என்ற தெளிவான மறுப்பையே அடிப்படையாகக் கொண்டமைந்திருந்தது. இந்த நிலைப்பாடு 'பயங்கரவாதத்தடைச்சட்டம் உள்ளடங்கலாக அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் இரத்துச்செய்து, மக்களின் சுதந்திரத்தை உறுதிசெய்வோம்' என்றவாறு தேர்தல் வாக்குறுதியாகவும் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது.

இவ்வாறு தெளிவாக அறிவிக்கப்பட்ட உறுதிமொழிகளையும், அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடிய தமது அரசியல் வரலாற்றையும் முழுமையாகப் புறக்கணித்திருக்கும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் மிகக்கொடூரமானதும், அதிகாரத்துஷ்பிரயோகத்துக்கு வாய்ப்பளிக்கக்கூடியதுமான அம்சங்களை மாற்றமின்றித் தக்கவைத்துக்கொண்டு, மேலும் தெளிவற்றதும் அபாயகரமானதுமான புதிய விதிகளின் மூலம் அரச அதிகாரத்தை விரிவுபடுத்துவதற்கு இடமளிக்கக்கூடிய ஒரு சட்டத்தைக் கொண்டுவருவதற்கு இப்போது தயாராகி இருப்பது மிகுந்த கவலையையும் அதிர்ச்சியையும் அளிக்கின்றது. அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் இந்த சட்ட வரைவு கருத்துச்சுதந்திரத்தையும், நபர்களின் தனியுரிமையையும் அச்சுறுத்தல் நிலைக்குள் தள்ளியிருக்கின்றது.

இந்தச் சட்டத்துக்கு நாங்கள் நிபந்தனையற்ற எமது முழுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றோம். இது எமது தனிப்பட்ட நிலைப்பாடு மாத்திரமல்ல. மாறாக அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்னர் தேசிய மக்கள் சக்தியும் மக்கள் விடுதலை முன்னணியும் அவர்களாகவே நாட்டுமக்களிடம் அறிவித்த அரசியல் நிலைப்பாட்டின் தொடர்ச்சியாகும்.

அரசாங்கம் இந்த சட்ட வரைவு குறித்து பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிவதற்கு ஒருமாத கால அவகாசத்தை அறிவித்திருந்தாலும், தேசிய ரீதியில் பல்வேறு அரசியல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள் நிலவுகின்ற தற்போதைய சூழ்நிலையில், இந்தளவு பரந்துபட்டதும் ஆழமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதுமான ஒரு சட்டத்தைக் கொண்டுவரும் பணிகளை விரைந்து முன்னெடுப்பது உண்மையான ஜனநாயகப் பங்கேற்பையும், மக்களின் அறிவார்ந்த ஒப்புதலையும் பாதிக்கின்றது. எனவே இது முன்னைய ஆட்சிக்காலங்களில் நடந்ததைப்போல, பொதுக் கலந்தாலோசனையை உள்ளடக்காத ஒரு நடைமுறைச்சடங்காகவே தோன்றுகிறது.

பயங்கரவாதத்தடைச்சட்டமானது சிறுபான்மையினர், அரசியல் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் அநீதிக்கு எதிராகக் குரலெழுப்புவோரை இலக்குவைத்துப் பிரயோகிக்கப்பட்டதுடன், அது அவர்கள்மீது மட்டுமீறிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி அந்தச் சட்டத்தினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டோரில் இன்றைய அரசை வழிநடத்தும் அரசியல் இயக்கத்தின் உறுப்பினர்களே முக்கியமானவர்களாக இருந்தனர். இத்தகைய பின்னணியில், அடக்குமுறைச் சட்டத்தின் விளைவுகளையும் பாதிப்புக்களையும் அனுபவித்தவர்களே இந்தச் சட்டத்தின் விளைவுகளை விதி விதியாக விளக்கிக் கூறுவது அவசியமற்றதாகும்.

முன்னர் ஆட்சியில் இருந்த எதிர்க்கட்சிகளுக்கு இந்தச் சட்டத்தை விமர்சிக்கும் அரசியல் உரிமை இருந்தாலும், அவர்களது சொந்த சட்ட வரலாறுகளை நினைத்துப் பார்க்கும்போது, அந்த விமர்சனங்களுக்கு நெறியியல் நம்பகத்தன்மை இல்லை என்பதையும் நாம் தெளிவாகக் கூறுகின்றோம். அதேபோன்று அடக்குமுறை சட்ட வடிவங்களை நீக்குவோம் என வெளிப்படையாக வாக்குறுதி அளித்திருந்த நிலையில், இவ்வாறானதொரு சட்டத்தைக் கொண்டுவர முயற்சிக்கும் தற்போதைய அரசுக்கும் நெறியியல் மற்றும் அறநெறிசார் சட்டபூர்வத்தன்மை இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

இந்த மகஜரில் கையொப்பமிட்டுள்ள நாமனைவரும் பயங்கரவாதத்தடைச்சட்டம் கொண்டுவரப்பட்ட நாள் முதல், அதற்கும் அதனை வேறு பெயர்களிலும் வடிவங்களிலும் மீண்டும் உருவாக்கும் சகல முயற்சிகளுக்கும் எதிராகத் திடமான எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்திருக்கின்றோம்.

எமது கிறிஸ்தவ நம்பிக்கையிலும் ஆன்மீகத்திலும் ஆழ்ந்திருக்கும் நாம், அநியாயத்தை சட்டமாக்கி, அரச அதிகாரத்தின் மட்டுமீறிய விரிவாக்கத்தை இயல்பாக்கம் செய்யும் சட்டங்களுக்கு எதிரான ஒரு அறநெறிசார் சாட்சியமாக இந்த மகஜரை முன்வைக்கின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.