2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமும் எமக்கானது அல்ல!
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டமும் எமக்கானது அல்ல என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டம் குறித்து நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”2023ம் ஆண்டிற்குள்ளே தமிழ் மக்களுக்கு எவ்வித நலன் சார்ந்த விடயமும் ஜனாதிபதி அவர்களால் முன்னெடுக்கப்படவில்லை. குறிப்பாக 30 வருட காலமாக நிகழ்ந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மற்றும் வட மாகாண மக்களுக்கு இந்த வரவு செலவுத் திட்டத்தில் எவ்வித நிதியும் ஒதுக்கப்படவில்லை.
இன்று வடக்கு கிழக்கிலுள்ள மக்கள் இந்த அரசாங்கத்தினால் இழைக்கப்படும் பாரிய கொடுமைகளுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரையில் கால்நடைகளை சுட்டு அழித்துக் கொண்டிருக்கும் கொடூர செயல் 90வது நாளாகவும் தொடர்கிறது.
மேலும் இன்று தொல்பொருள் என்ற பெயரில் இனவாதிகள் இணைந்து வடக்கு, கிழக்கில் இருக்கும் எங்களின் ஆலயங்களை அழித்து கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறான சூழ்நிலையில் குறித்த வரவு செலவுத் திட்டத்திற்கு வடக்கு, கிழக்கினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு ஆதரவு வழங்கலாம் என எமது மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும்.
அத்துடன் இவ் வரவு செலவுத் திட்டத்திற்கு சார்பாக வாக்களிக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களுக்கும் எமது தமிழ் மக்கள் எதிர்காலத்தில் சிறந்த பதிலடியினை வழங்குவார்கள் என்பது முற்றிலும் உண்மை” இவ்வாறு தெரிவித்துள்ளார்.