உலகின் ஆபத்தான சிரியா சிறைச்சாலை!

10.12.2024 07:55:21

உலகம் முழுவதும் எத்தனையோ நாடுகளில் எத்தனையோ சிறைச்சாலைகள் இருந்தாலும் இந்த சிறைச்சாலை அளவுக்கு கொடூரமான ஒரு சிறைச்சாலையை பார்க்க முடியாது என்கிறார்கள் சிரியாவை தொடர்ந்து ரிப்போர்ட் செய்து வரும் பல பன்னாட்டு செய்தியாளர்கள்.

பல நாடுகளில் சிறைச்சாலைகள் இருந்தாலும், அதில் பல சிறைச்சாலைகள் கைதிகள் தப்பி செல்லாமல் இருக்க பாலைவனத்திற்கு நடுவே, தனித்தீவில் என அமைப்பது உண்டு. ஆனால் சிரியாவில் உள்ள இந்த சிறைச்சாலையை நேரில் கண்டவர்கள் மிக சொற்பமே. இந்த சிறைக்கு சென்றவர்கள் பெரும்பாலும் உயிரோடு வருவதில்லை என்கிறார்கள் சர்வதேச பத்திரிக்கையாளர்கள்.

அப்படியொரு சிறைச்சாலைதான் சிரியாவில் உள்ள சேட்னயா (Saydnaya Prison). இந்த சிறைச்சாலை சிரியாவின் தலைநகர் டெமாஸ்கஸில் இருந்து 15 கி.மீ வடக்கே பாலைவனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த சிறையை நேரில் பார்த்து இதுவரை யாரும் படம் பிடித்ததில்லை என்ற நிலையே தற்போது கிளர்ச்சியாளர்கள் குழு நாட்டை பிடிக்கும் வரை இருந்து வந்துள்ளது. கூகிள் மேப்பில் கிடைக்கும் புகைப்படத்தின் மூலமாகதான் அங்கு செயல்படும் இந்த சிறைச்சாலையே பலருக்கு தெரிய வந்துள்ளது. இந்த சிறைச்சாலைக்கு விசிட்டர்கள், வழக்கறிஞர்கள் என யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.