சட்ட மறுப்பு போராட்டத்தை முன்னெடுப்போம்
பொருளாதாரத்துக்கு ஒத்துழைக்க நாங்கள் தயாராக இருக்கும் நேரத்தில் இனவாதத்தில் இன்னும் எங்களை அடக்கி, ஒடுக்க நினைத்தால் நாடு இன்னும் அதல பாதாளத்துக்குள் செல்லும் என்றும் இதனை எவராலும் தடுக்க முடியாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் எம்.பி, அரசாங்கத்தை எச்சரித்தார்.
அரச இயந்திரம் இனப்பாகுபாட்டை காட்டியவாறு தொடர்ச்சியாக இனவாத நோக்கத்துடன் இந்த அரசாங்கம் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், தொடர்ந்தும் இந்த செயற்பாடுகளை முன்னெடுத்தால் வெகுவிரைவில் ஒத்துழையாமை இயக்கத்தை அமைக்கவும், சட்ட மறுப்பு போராட்டத்தை முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுப்போம் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்ற குற்றவியல் சட்டத் திருத்தங்கள் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “அரச இயந்திரம் இனப்பாகுபாட்டை காட்டியவாறு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. பாராளுமன்றத்திலும் அதனை காணக்கூடியதாக இருக்கின்றது. வடக்கு, கிழக்கு தொடர்பில் ஏதேனும் கேள்வி கேட்டால் முன்வரிசையில் இருக்கும் அமைச்சரே எங்களை பயங்கரவாதி என்று கூறுமளவுக்கு நிலைமை உள்ளது.
நியாயமான முறையில் இருக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது. அவ்வாறு இருக்காவிட்டால் அதனை வெளிப்படுத்தும் பொறுப்பு மக்கள் பிரதிநிதிகளுக்கு உள்ளது.
அதனை வெளிப்படுத்தி அதனை பாராது இருக்கும் போது நாங்கள் இப்போது செய்வதை போன்று ஒத்துழையாமை இயக்கத்தை செய்யும் கட்டாயம் எழுந்துள்ளது. கதவடைப்பு மட்டுமன்றி வெகுவிரைவில் சட்ட மறுப்பு போராட்டத்தையும் முன்னெடுக்க வேண்டியதாக இருக்கும் என்பதனையும் இந்த அரசாங்கத்துக்கு கூறிக்கொள்கின்றோம்” என்று எச்சரிக்கை விடுத்தார்.
“இன்றைய தினம் (நேற்று) வடக்கு, கிழக்கில் முழுமையாக கதவடைப்பு போராட்டம் நடைபெறுகின்றது. இதற்கு காரணங்கள் உள்ளளன. பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இன்றைய தினத்தில் அறிமுகப்படுத்தப்பட இருந்தது. ஆனால் நாட்டிலும், சர்வதேசத்திலும் இதற்கு எதிராக எழுப்பப்பட்ட குரல்களுக்கு பயந்து பிற்போடப்பட்டுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை பின்போடுவதால் எந்தப்பலனும் கிடையாது. அது முற்றாக மீள கைவாங்கப்பட வேண்டும். இது மீளக் கைவாங்கப்பட்டால் தற்போதைய பயங்கரவாத சட்டம் தொடர்ச்சியாக இருக்கும் என்று நீதி அமைச்சர் கூறுகின்றார்.
பயங்காரவத தடுப்பு சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும். ஏற்கனவே பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என்று 2017 ஆம் ஆண்டில் தற்போதைய ஜனாதிபதியான அன்றைய பிரதமர் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உறுதியளித்திருந்தார்.
அவ்வாறு நடந்துகொள்ளாமையினாலேயே ஜீஎஸ்பி வரிச்சலுகை இல்லாமல் போகின்றது. இவ்வாறான நிலைமையிலேயே பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்று பின்வாங்கியுள்ளது. ஆனால் இதனை இல்லாது செய்யும் வரையில் எமது போராட்டம் தொடரும்.
காணி அபகரிப்புகளை ஏற்றுக்கொள்ள முடியாது. எமது எதிர்ப்பை மீறி அரசாங்கம் செயற்பட்டால் பாரிய சட்டமறுப்பு போராட்டத்திற்கு முகம்கொடுக்க நேரிடும். பொருளாதார நெருக்கடியில் சிக்க நேரிடலாம் ” என்றார்.