கீழ் மல்வத்து ஓயா திட்டம் மக்களைக் குடியேற்றுவதற்கானதல்ல.
ஏனைய மாகாணங்களைச் சேர்ந்த மக்களை வன்னி மாவட்டத்தில் குடியேற்றும் நோக்கில் கீழ் மல்வத்து ஓயா பன்முக அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படவில்லை என கூட்டுறவு அபிவிருத்திப் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கிராமிய அபிவிருத்தி மற்றும் விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டம் தொடர்பாக, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் விசேட கலந்துரையாடல் வவுனியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
கீழ் மல்வத்து ஓயா திட்டத்தின் மூலம் வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவதாகவும், ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த மக்களைக் குடியேற்றும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கில் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
47.18 பில்லியன் ரூபா மதிப்பீட்டில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் மூலம் அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களின் குடிநீர்ப் பற்றாக்குறைக்குத் தீர்வு காண்பது, தந்திரிமலை பகுதியில் புதிய அபிவிருத்தி வலயத்தை உருவாக்குவது, மன்னார் மாவட்டத்தின் யோத குளம் மற்றும் அகத்திமுப்பு குளத்தின் கீழ் உள்ள 30,690 ஏக்கர் நெற்செய்கை நிலங்களின் பயன்பாட்டை மேம்படுத்துவது மற்றும் நீர்மின் உற்பத்தியை மேற்கொள்வது ஆகியவை முக்கிய நோக்கங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் முதற்கட்டப் பணிகளுக்காக 2026ஆம் ஆண்டில் 5,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், திட்டத்தினால் பாதிக்கப்படும் வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கு இழப்பீடு மற்றும் மாற்றுக் காணிகளை வழங்குதல், அவர்களை மீள்குடியேற்றுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, திட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து வன்னி மக்களிடையே சில தவறான புரிதல்கள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மக்களுக்குக் கிடைக்கும் நன்மைகளைக் கருத்திற்கொண்டே தற்போதைய அரசாங்கம் இத்திட்டத்தை முன்னெடுப்பதாகவும், ஏனைய மாகாணங்களைச் சேர்ந்த மக்களை வன்னி மாவட்டத்தில் குடியேற்றுவது இதன் நோக்கமல்ல என்பதால், இது தொடர்பான அச்சங்களையும் சந்தேகங்களையும் தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம். ஜெகதீஸ்வரன், காதர் மஸ்தான், செல்வம் அடைக்கலநாதன், ப. சத்தியலிங்கம், கீழ் மல்வத்து ஓயா பன்முக அபிவிருத்தித் திட்டப் பணிப்பாளர் அனுர நெலுகொல்ல, வவுனியா மாவட்டச் செயலாளர் பி.ஏ. சரத்சந்திர மற்றும் திட்டத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.