சிரியாவின் கடற்படை, தளங்கள் மீது இஸ்ரேல் சரமாரியான தாக்குதல்!
ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து அந்நாட்டு இராணுவம் விட்டுச் சென்ற ஆயுதங்களை அழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடந்த இரு நாட்களில் நூற்றுக்கணக்கான சிரியாவின் கடற்படை மற்றும் பிற இராணுவ சொத்துக்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேலிய ஏவுகணைக் கப்பல்கள் அசாத்தின் படைகளுக்குச் சொந்தமான கடற்படைக் கப்பல்களை அழித்தன, அவை 120 மைல்கள் வரை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் திங்கட்கிழமை ஒரு அறிக்கையில்,
லதாகியா மற்றும் எல் பெய்டா விரிகுடாவின் துறைமுகப் பகுதியில் இந்த தாக்குதல்கள் நடத்தியதாக கூறியது.
ஆயுதங்கள் கிளர்ச்சியாளர்களின் கைகளில் கிடைத்தால், அவற்றை இஸ்ரேலுக்கு எதிராக பயன்படுத்த முடியும் என்ற காரணத்தினால், அவை கிளர்ச்சியாளர்களின் கைகளில் கிடைப்பதை தடுக்கும் நோக்கில் இந்த தாக்குதல் அரங்கேற்றப்பட்டதாகவும் கூறியுள்ளது.
லதாகியா துறைமுகத்தில் குண்டுவெடிப்புகளைக் காட்டும் வீடியோக்களை பிபிசி சரிபார்த்துள்ளது, படக்காட்சிகள் கப்பல்கள் மற்றும் துறைமுகத்தின் சில பகுதிகளுக்கு விரிவான சேதத்தை எற்படுத்துவதை வெளிக்காட்டுகின்றன.
சிரியா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்றுகளுக்கு இடையே உள்ள இராணுவமற்ற பாதுகாப்பு மண்டலத்திற்கு தரைப்படைகளை நகர்த்தும்போது, சிரியா முழுவதும் உள்ள இலக்குகள் மீது அதன் போர் விமானங்கள் 350 க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகவும் இஸ்ரேலிய பாதுகாப்பு படை கூறியுள்ளது.
முன்னதாக, சிரிய அரசாங்கம் கிளர்ச்சியாளர்களால் ஞாயிற்றுக்கிழமை தூக்கியெறியப்பட்டதிலிருந்து இஸ்ரேலிய பாதுகாப்பு படை 310 க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பு (SOHR) கூறியது.
இதனிடையே, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஒரு அறிக்கையில், “இஸ்ரேல் அரசை அச்சுறுத்தும் மூலோபாய திறன்களை அழிப்பதை” இஸ்ரேலிய படையினரின் நோக்கம்.
சிரிய கடற்படையை அழிக்கும் நடவடிக்கை “பெரும் வெற்றி” பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
சிரிய தலைநகர் டமாஸ்கஸ், ஹோம்ஸ், டார்டஸ் மற்றும் பால்மைராவில் உள்ள விமானநிலையங்கள், இராணுவ வாகனங்கள், விமான எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் ஆயுத தயாரிப்பு தளங்கள் உட்பட – பரந்த அளவிலான இலக்குகள் தாக்கப்பட்டதாகவும் இஸ்ரேலிபய பாதுகாப்பு படை குறிப்பிட்டுள்ளது.
தாக்குதல்கள் ஆயுதக் கிடங்குகள், வெடிமருந்துக் கிடங்குகள் மற்றும் கடல் ஏவுகணைகளையும் குறிவைத்து அரங்கேற்றப்பட்டுள்ளது.