கொழும்பிலும் மேல்மாகாணத்திலும் இத்தனை யாசகர்கள் !!

17.01.2022 10:26:14

கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணம் முழுதும் 671 யாசகர்கள்  இருப்பது, பொலிஸ் உளவுச் சேவை ஊடாக முன்னெடுக்கப்பட்ட தகவல் சேகரிப்பில் கண்டறியப்பட்டுள்ளது.

மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் கீழ், இந்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.  இந்த 671 யாசகர்களில் 193 பேர் பெண்கள் என பொலிஸ் உளவு பிரிவின் தரவுகள் கூறுகின்றன.

பொலிஸ் உளவுப் பிரிவின் தரவுகளுக்கு அமைய,  அடையாளம் காணப்பட்டுள்ள மேல் மாகாண யாசகர்களில்,  509 பேர் மேல் மாகாணத்தை நிரந்தர வதிவிடங்களாக கொண்டவர்கள் என தெரியவந்துள்ளது. ஏனையவர்களில் வடக்கு, கிழக்கை சேர்ந்த நால்வர் அடங்கின்றனர். எஞ்சியவர்கள்,  ஏனைய மாகாணங்களை சேர்ந்தவர்களாவர்.

இந் நிலையில் இந்த 671 யாசகர்களில்  321 பேருக்கு பெற்றோர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் இருப்பதுடன்,  274 பேர் திருமணமானவர்களாவர்.

மேல் மாகாணத்தில் உள்ள யாசகர்களில் 567 பேர், யாசகத்தை கைவிட்டு, சமூக நல நிலையங்களுக்கு செல்ல விருப்பமின்றி இருக்கின்றமை  உளவுப் பிரிவின் தரவுகளுக்கு அமைய உறுதியாகியுள்ளது.

இவ்வாறான பின்னணியில் அனைத்து யாசகர்கள் குறித்தும் அவ்வந்த பொலிஸ் நிலையங்கள் ஊடாக விஷேட அவதானம் செலுத்தப்பட்டு கோவை ஒன்று முன்னெடுத்து செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த யாசகர்களில் பலர் இதனை ஒரு வர்த்தக நடவடிக்கையாக முன்னெடுப்பதும் தெரியவந்துள்ளது