அரசியல் நாகரிகமற்ற செயல்.
|
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அறிவிப்பின்படி மார்ச் 30 ஆம் தேதியிலிருந்து தொடங்கும் வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 6ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தேதியில் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். |
|
அண்மையில் நடைபெற்ற போராட்ட நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து தவெகவின் ஆதவ் அர்ஜுனா பேசி இருந்த கருத்துக்கள் பலருடைய கண்டனத்திற்கு உள்ளாகியிருந்தது. அவரது பேச்சில், '' தமிழ்நாட்டில் எம்ஜிஆருக்கு பிறகு ஒரு பிரபலமான ஒரு தலைவராக ரஜினிகாந்த் வர வேண்டும் என்று நினைத்தார். அரசியலுக்கு வந்து சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்று நினைத்தார். ஆனால், இதே திமுக குடும்பம் பல மிரட்டல்களை கொடுத்து அவரை அரசியலுக்கு வராமல் பார்த்துக் கொண்டார்கள். கடைசியில் அவர் ரெட் ஜெயண்ட் பிக்சர்ஸில் நடிக்க போய்விட்டார். அவர் மேல் விமர்சனம் கிடையாது. ஆனால், மன வலிமை விஜய்யிடம் இருக்கிறது என்பதை பதிவு செய்கிறேன்” என்று கூறியிருந்தார். ரஜினிகாந்த் குறித்த இந்த கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'தமிழ்த் திரையுலகின் சூப்பர்ஸ்டார், அன்புச் சகோதரர் ரஜினிகாந்த் அவர்கள் குறித்து த.வெ.க கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நிர்வாகி ஒருவர் அவதூறான கருத்துகளைப் பேசியுள்ளது கண்டனத்திற்குரியது. அரசியலைக் கடந்து எல்லோராலும் மதிக்கப்படும் திரை ஆளுமை ரஜினிகாந்த் அவர்கள். புரட்சித் தலைவரின் அன்பையும், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நன்மதிப்பையும் பெற்ற அவரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது ஏற்கதக்கதல்ல. அரசியலுக்கு வருவது எப்படி ஒவ்வொரு தனிமனிதரின் உரிமையோ, அதேபோல் அரசியலுக்கு வராமல் இருப்பதும் அவர்தம் உரிமை. அதற்கான உரிய காரணத்தை அவரே தெரிவித்துவிட்ட பிறகு, அதற்கு மதிப்பளிக்க வேண்டுமே தவிர, அரசியல் நோக்கத்தோடு அதை அணுகி, அவதூறு கருத்துகளைப் பேசுவது என்பது அரசியல் நாகரிகமற்ற செயல்' என தெரிவித்துள்ளார். |