இலங்கையை சேர்ந்த இரண்டு தமிழர்கள் பலி
வயநாடு பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் சிக்குண்டு இலங்கையிலிருந்து குடிபெயர்ந்த இரண்டு தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிலச்சரிவில் உயிரிழந்த இரண்டு தமிழர்களும் இலங்கையிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கையில் இருந்து குடிபெயர்ந்து தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் கூடலூர் புளியம்பாறை வாழும் காளிதாஸ் மற்றும் கூடலூர் அய்யன்கொள்ளியில் வாழும் கல்யாணக் குமார் ஆகியோர் கேரளா வயநாடு நிலசரிவில் சிக்கி உயிரிழந்துள்ளமை கவலையளிக்கிறது.
இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ள கூடலூர் காளிதாஸ் மற்றும் கல்யாணக் குமார் ஆகியோர் நான் கூடலூருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தருணத்தில் எனது கூட்டத்திற்கு சமூகமளித்தது என் மனதில் நினைவளிக்கிறது.
எதிர்பாராது ஏற்பட்டுள்ள இவர்களது இழப்பு கவலையளிப்பதுடன், இவர்கள் குடும்பத்துக்கு எனது இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என செந்தில் தொண்டமான் பதிவிட்டுள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 250 என கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
தோண்ட தோண்ட சடலங்கள் கிடைப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
இதில் மேப்பாடி, சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
மீட்பு பணியில் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், விமானப் படையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டிருக்கின்றனர்.
இந்த மண்சரிவில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதுடன், மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.