”இனி ஓர் இனவழிப்பு நிகழவிடோம்”.

10.12.2025 14:59:34

2025 திசம்பர் 9 – 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை திசம்பர் 9ஆம் நாளை இனவழிப்புக் குற்றத்தால் பாதிப்புற்றவர்களின் நினைவுக்கும் கண்ணியத்துக்குமான நாளாகவும், இந்தக் குற்றத்தைத் தடுப்பதற்கான நாளாகவும் அறிவித்தது.

    

 

A/RES/69/323 என்ற தீர்மானத்தின் ஊடாக அந்த நாளை இனவழிப்பினால் பாதிப்புற்றவர்களுக்கு மதிப்பளிப்பதற்கும், இனவழிப்புக் குற்றத்தைத் தடுத்தல், தண்டித்தல் பற்றிய 1948 ஒப்பந்தம் குறித்து விழிப்புணர்வு ஏற்படச் செய்வதற்குமான நாளாக அத்தீர்மானம் வரையறை செய்தது. ”மீண்டும் ஒருபோதும் நிகழவிடோம்” என்ற கொள்கைதான் இந்த ஒப்பந்தத்தின் மையமும் குறிக்கோளுமாக அமைந்தது. ஆனால் இந்த ஒப்பந்தம் இயற்றப்பட்ட பிறகான இந்த 77 ஆண்டுக் காலத்தில் இந்தக் கொள்கை தொலைதூரக் கனவாகவே இருந்து வருகிறது.

இனவழிப்பு ஒப்பந்தம் இயற்றப்பட்டதைத் தொடர்ந்து ருவாண்டா, போஸ்னியா, தார்ஃபூர், இலங்கைத் தீவு, காசா உள்ளிட்ட உலகப் பகுதிகள் பலவற்றிலும் பன்னாட்டுச் சமுதாயம் இந்தக் கொடுங்குற்றம் நிகழக் கண்டுள்ளது. இந்த நிகழ்வுகள் பலவற்றிலும் பாதிப்புற்றவர்களும், பாதிப்புற்று உயிர்பிழைத்தவர்களும் இன்னமும் நீதிக்காகக் காத்துள்ளனர். பொறுப்புக்கூறல் இல்லை என்ற நிலை மிகப் பரவலாகக் காணப்படுவதன் பின்னால் மறைந்துள்ள காரணம் அரசுகளே குற்றம் புரிந்திருப்பதுதான். இதுவே இந்த வன்கொடுமைகளை அறிந்தேற்கவும், அதனை அதற்குரிய பெயரால் அழைக்கும் பன்னாட்டு மனப்பக்குவத்தை தடை செய்யும் அரசியல் சக்தியாகின்றது. "இனவழிப்பு” என்ற முத்திரை வெறும் முத்திரையன்று; இதில் பெரும் நெறிமுறை அர்த்தமும் பொறுப்பும் தங்கியுள்ளது.

இனவழிப்புக் குற்றத்தால் பாதிப்புற்றவர்களின் நினைவுக்கும் கண்ணியத்துக்கும் இந்தக் குற்றத்தைத் தடுப்பதற்குமான பன்னாட்டு நாளாகிய இன்று பன்னாட்டு அரசுகள் இந்தக் குற்றத்தைத் தடுக்கும் கடப்பாடுடையவை என்பதை அறிந்தேற்கிறோம். இனவழிப்புக் குற்றத்தை ஒப்புக் கொள்வது தாமும் உடந்தையாக இருப்பதை வெளிப்படுத்தி, தமக்கும் பாதமான சட்ட விளைவுகளைக் கொண்டுவரும் என்ற அச்சத்தால் அவை பலநேரம் இந்தப் பொறுப்பினைத் தட்டிக் கழித்துள்ளன என்பதும் நாமனைவரும் அறிந்த செய்திதான், நடப்பிலுள்ள தொழில்நுட்பவியல் முன்னேற்றங்களின் காரணத்தால், என்ன நடந்தது என்பது அனைத்து பன்னாட்டு அரசுகளுக்கும் முழுமையாகத் தெரியும்.

சிறிலங்கா அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான ஆயுத மோதலின் இறுதிநிலைகளில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட வன்கொடுமைகளைப் பொறுத்த வரை ஆயுத மோதலின் இறுதிநிலைகளில் இனவழிப்பு செய்யப்பட்டதா என்பது குறித்து அதிகாரமுறை ஐநா அறிக்கைகள் ஒரு திட்டவட்டமான முடிவை இது வரை வழங்கவில்லை.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீனப் பிரதேசங்களுக்கான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் பிரன்சிஸ்கா அல்பனிஸ், இனவழிப்பு ஒப்பந்தத்தின் படி, “காசாவில் பாலத்தீனர்களுக்கு எதிரான இனவழிப்புச் செயல்கள் செய்யப்பட்டிருப்பதைக் காட்டும் எல்லை அடையப்பட்டு விட்டது என்று நம்புவதற்கு அறிவுக்குகந்த காரணங்கள்” உள்ளன என கூறியுள்ளார். “ஓர் இனவழிப்பின் உடற்கூறியல்” (Anatomy of Genocide) என்ற தன் அறிக்கையில் மூன்று செயல்களை எடுத்துக்காட்டி, "தாக்குதலின்” பெரும்படியான தன்மையும் வீச்சும், அது சுமத்திய நாசகர வாழ்க்கை நிலைமைகளும் உரிய ஆள்புலத்தில் மக்களை "ஒரு குழுவாக” ஒழித்துக்கட்டும் நோக்கத்தை வெளிப்படுத்துகின்றன, என அல்பனிஸ் அம்மையார் எடுத்துக்காட்டுகின்றார்: ஒன்று, “குழு உறுப்பினர்களை சாகடித்தல்", இரண்டு, "குழு உறுப்பினர்களுக்கு உடல்வகையிலோ உளவகையிலோ கடுமையாக ஊறு செய்தல்”. மூன்று, “முழுமையாகவோ பகுதியாகவோ உடல்வகையில் அழிவைத் தோற்றுவிக்கும் நிலைமைகளை குழுவின் மேல் வேண்டுமென்றே சுமத்துதல்”. இதே செயல்கள்தான் ஆய்த மோதலின் போது ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்காவால் செய்யப்பட்டவை என்று அப்போதைய ஐநா பொதுச் செயலர் பான் கீ-மூன்அமர்த்திய வல்லுநர் குழு அறிக்கை சொல்கிறது (POE).

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் 2011 ஏப்ரல் 29 நாளிட்டு ஐ.நா. பொதுச் செயலருக்கு எழுதிய மடலில் வல்லுநர் குழு அறிக்கையின் முடிவுகளைத் தொடர்ந்து ஐ.நா. பட்டயத்தின் உறுப்பு 99 இன் கீழ் இன அழிப்புதொடர்பாக பன்னாட்டு விசாரணை தொடங்கும்படி அவரைக் கேட்டுக்கொண்டது.

ஐ.நா. பொதுச் சபை அறிந்தேற்பது போல், இனவழிப்புக்குத் தூண்டுவது அடையாள வேறுபாடுகள் அல்ல, அந்த வேறுபாடுகளில் வேர்கொண்டுள்ள சமத்துவமின்மையே காரணமாகும். இச் சமத்துவமின்மை அதிகாரத்தையும், வளங்களையும், வளர்ச்சி வாய்ப்புகளையும் அணுகும் வாய்ப்பு வகையில் வெளிப்படுகின்றன. இன்றுங்கூட கொடிய பேரிடருக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையில் தமிழர்கள் துயர்தணிப்பு நடவடிக்கைகளுக்குத் திட்டமிடவும் அவற்றுக்குச் செயல்வடிவம் கொடுக்கவும் நேர் அணுகலுக்கு உரிமை மறுக்கப்பட்ட நிலையில்தான் உள்ளனர். 2009ஆம் ஆண்டு தமிழர்கள் உடல்வகையில் நேர் இனவழிப்புக்கு ஆளானதைத் தொடர்ந்து சிறிலங்க அரசு தமிழர்தம் சமயத் தலங்களையும் தமிழ் நிலங்களையும் அழிப்பதன் ஊடாகவும் பறித்துக் கொள்வதன் ஊடாகவும் தமிழ் அடையாளத்தை அழிக்கும் கடுமுனைப்பான அமைப்புசார் இன அழிப்பில் (Structural Genocide) ஈடுபட்டுள்ளது. இந்தச் செயல்கள் பண்பாட்டு வகை இனவழிப்பாக அமைந்து, இனவழிப்பு குற்றத்தின் அங்கமான தனி நோக்கத்தை (Special Intent) நிறுவுவதில் குறிப்பான முக்கியத்துவம் பெறுவதாக அகயேசு விசாரணை மன்றம் (Akayesu Trial Chamber) அறிந்தேற்கிறது.

தமிழர் இனவழிப்பைப் பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தும் படி 2022ஆம் ஆண்டுக் கனடிய பாராளுமன்ற தீர்மானமும் பன்னாட்டு நீதிமன்றத்தில் (International Court of Justice) சிறிலங்காவுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பிரித்தானிய அரசைக் கேட்டுக் கொள்ளும் அண்மைய ஸ்காட்லாந்தியத் தீர்மானமும் இனவழிப்புக்கு பலியான தமிழர்களுக்கு நீதியும் பொறுப்புக்கூறலும் பெற்றுக்கொடுப்பதன் திசையில் ஊக்கமளிக்கும் அடியெடுப்புகள் ஆகும். இனவழிப்புக்கு நீதி செய்வதுதான் கண்ணியத்துக்கு வழிகோலும் என்பதை அறிந்தேற்று, பாதிப்புற்றவர்களுடனும் பாதிப்புற்று உயிர்பிழைத்தவர்களுடனும் தோழமை கொண்டு, ”மீண்டும் ஒருபோதும் நிகழவிடோம்” என்ற குறிக்கோள் மெய்ப்படச் செய்ய மீளுறுதி கொள்கிறோம். இனவழிப்புக்கு நீதி செய்வதுதான் இனவழிப்பினால் பாதிப்புற்றோர்க்கு கண்ணியம் சேர்க்கும். இந்த நாளில் இனவழிப்பினால் துயரப்பட்ட அனைவரோடும் கைசேர்த்து ”மீண்டும் ஒருபோதும் நிகழவிடோம்” என்ற குறிக்கோள் மெய்ப்படச் செய்திட நம்மை மீண்டும் அர்ப்பணித்துக் கொள்வோம்.