முதல்முறையாக சம்பியன் பட்டம் வென்றது முல்தான் சுல்தான் அணி !
பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடரின் இறுதிப் போட்டியில், முல்தான் சுல்தான் அணி 47 ஓட்டங்களால் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
அபுதாபி மைதானத்தில் நேற்று (வியாழக்கழமை) நடைபெற்ற இறுதிப் போட்டியில், முல்தான் சுல்தான் அணியும் பெஷாவர் ஸல்மி அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பெஷாவர் ஸல்மி அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய முல்தான் சுல்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சோஹைப் மக்சூத் ஆட்டமிழக்காது 65 ஓட்டங்களையும் ரொசவ் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பெஷாவர் ஸல்மி அணியின் பந்துவீச்சில், மொஹமட் இர்பான் மற்றும் சமீன் குல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 207 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பெஷாவர் ஸல்மி அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்தது. இதனால் முல்தான் சுல்தான் அணி 47 ஓட்டங்களால் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக சொயிப் மாலிக் 48 ஓட்டங்களையும் கம்ரன் அக்மல் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
முல்தான் சுல்தான் அணியின் பந்துவீச்சில், இம்ரான் தஹீர் 3 விக்கெட்டுகளையும் இம்ரான் கான் மற்றும் பிளெஸிங் முஸரபானி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சொஹைல் டன்வீர் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 35 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 6 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 65 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட சோஹைப் மக்சூத் தெரிவுசெய்யப்பட்டார்.
அத்துடன் சோஹைப் மக்சூத் தொடரின் நாயகன் விருதையும் வென்றார். அவர் 12 இன்னிங்சுகளில் விளையாடி 428 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
ஆறாவது பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் சம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் முல்தான் சுல்தான் அணி முதல் சம்பியன் கிண்ணத்துக்கு முத்தமிட்டது.
2017ஆம் ஆண்டு சம்பியன் பட்டத்தை வென்ற பெஷாவர் ஸல்மி, 2018, 2019 மற்றும் நடப்பு ஆண்டு என மூன்று முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி சம்பியன் பட்டத்தை நழுவவிட்டுள்ளது.