தனிநபர் பிரேரணை!

11.06.2026 09:05:00

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக இரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பாராளுமன்றத்தில் தனி நபர் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

    

 

இந்தச் பிரேரணை பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் பட்டியலிடப்பட்டிருந்தாலும், இதுவரை பாராளுமன்ற விவாதத்திற்காக எடுத்துக்கொள்ளப்படவில்லை. அத்துடன் இவை தொடர்பான தனிப்பட்ட உறுப்பினர் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தனிப்பட்ட உறுப்பினர் சட்டமூலமும் இன்றளவிலும் வர்த்தமானியில் வெளியிடப்படாத நிலையில் உள்ளது.

இது தொடர்பில் அவர் சமர்ப்பித்துள்ள பிரேரணையில், 1979 ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாக அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பின்னர் நிரந்தர சட்டமாக மாற்றப்பட்டு, பல தசாப்தங்களாக மனித உரிமை மீறல்கள், தன்னிச்சையான கைது நடவடிக்கைகள் மற்றும் நீண்டகால தடுப்புக் காவல்களுக்கு வழிவகுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தின் கீழ் பலர் முறையான குற்றச்சாட்டுகள் அல்லது நீதிமன்ற விசாரணைகள் இன்றி நீண்டகாலம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன்,கருத்துச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம், அமைதியான எதிர்ப்புரிமை மற்றும் ஜனநாயக உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள்,சமூக செயற்பாட்டாளர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள் இச்சட்டத்தின் மூலம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்புகள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பல சர்வதேச,உள்ளூர் சிவில் சமூக அமைப்புகள் நீண்டகாலமாக இச்சட்டத்தை முழுமையாக இரத்து செய்யுமாறு வலியுறுத்தி வருகின்றன.

சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்றும், மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயக அடிப்படைக் கோட்பாடுகளுக்கு ஏற்ப புதிய சட்ட கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், தற்போதைய அரசாங்கம் தேர்தல் காலத்தில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவதாக வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை புதிய பெயரில் மாற்றி அமைப்பதற்குப் பதிலாக, அதனை முழுமையாக இரத்து செய்து மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தும் சட்ட நடைமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நல்லிணக்கம், நீதிமுறை,பொறுப்புக்கூறல் மற்றும் ஜனநாயக ஆட்சியை வலுப்படுத்தும் நோக்கில் இந்தச் சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கான அரசியல் உறுதிப்பாட்டை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இந்தப் பிரேரணை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் இடம்பெற வேண்டும் என்றும், அனைத்து அரசியல் கட்சிகளும் கட்சி வேறுபாடுகளைக் கடந்து மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.