நீதித்துறைக்கு மரண அடி!
|
நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுவரும் நிலையில் நீதிபதிகளின் வயதெல்லையை நீடிப்பதே அரசாங்கத்துக்கு இருக்கும் பிரதான தேவையாக உள்ளது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை நீதித்துறைக்கான மரண அடியாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். |
|
நாட்டில் நிலவும் பிரச்சினைகளை விட, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதே தற்போதைய அரசாங்கத்தின் பிரதான விடயமாக மாறியுள்ளது. உரம் மற்றும் நீர்ப்பாசன புனரமைப்பு, சிறைச்சாலை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விட, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதே நாட்டின் மிகப்பெரிய தேசிய முன்னுரிமையாக தற்சமயம் மாறி காணப்படுகின்றது. நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது அதிகரிக்கப்படுவதால் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கப்போவதில்லை, வறுமை ஒழியப்போவதுமில்லை, வேலையில்லாப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கப்போவதில்லை. இந்த ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பின் ஊடாக அரசாங்கம் எதிர்பார்த்த வளமான நாடும், அழகான வாழ்க்கையும் கூட உருவாக்கப்படாது. தனிக் கட்சி முழு நாட்டையும் ஆளும் செயற்பாடே இதன் ஊடாக உருவாக்கப்பட போகின்றது. இந்த அரசாங்கம் நாட்டில் தனி ஆட்சியை கொண்டு வரவே முற்படுகிறது. இதனால் ஜனநாயகம் சீர்குலைந்து, நீதித்துறையின் சுதந்திரத்திற்கு பாரிய அடி விழுவதுடன் நீதி வழங்கும் செயற்பாடும் முடங்கிப்போகும் கடந்த காலத்தில் இளைஞர் மன்றங்கள், சிவில் பாதுகாப்பு குழுக்கள் போன்றவற்றுக்குக் கூட பெலவத்தை கட்சி அலுவலகத்தின் பட்டியலின்படியே பதவிகள் வழங்கப்பட்டன. ஜனநாயகத்தை நாசம் செய்யும் திட்டத்தை முன்னெடுத்த இந்த அரசாங்கம் தற்போது நீதித்துறையின் மீதும் அழுத்தம் கொடுக்க முற்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகள், குடிமக்கள் மற்றும் சிரேஷ்ட பிரஜைகளின் உரிமைகளைப் பலப்படுத்தும் அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவருவதற்கான சந்தர்ப்பம் காணப்பட்ட போதிலும், அரசாங்கம் எதையுமே செய்யவில்லை. அரசாங்கம் இவற்றைச் செய்யாவிட்டாலும், தற்போது அடிப்படை உரிமைகளுக்குள் வராத பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் மற்றும் ஆபத்துக்குள்ளாகக்கூடிய தரப்பினரின் உரிமைகளை அடிப்படை உரிமைகளாக மாற்ற ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருக்கிறது. நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதை விடுத்து, வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் உருவாக்குவதற்காகவே அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை கிடைத்தது. தேர்தல்காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். தற்போது அரசாங்கம் பொய்களைக் கூறி பிரச்சினைகளை மறைத்து வருகின்றது. நாட்டில் 30 முதல் 40 வீதமானோர் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்றனர். வைத்தியசாலைகளில் மருந்துகள் இல்லாமையினால் தனியார் மருந்தகங்களிலிருந்து மருந்துகளைப் பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய பிரச்சினைகள் இருக்கும் போது அரசாங்கம் தனிக் கட்சி ஏகாதிபத்தியத்தை நாட்டில் கொண்டு வர முற்படுகின்றது 11 இலட்சம் வழக்குகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறி நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அரசாங்கம் அதிகரிக்க முற்படுகின்றது. ஆனால் உயர் நீதிமன்றத்திலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் உள்ள நீதிபதி வெற்றிடங்களை அரசாங்கம் இன்னும் நிரப்பவில்லை. அரசாங்கம் மேற்கொண்டுவரும் இந்த நடவடிக்கைகள் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு விடுக்கப்படும் பாரிய அடியாகும் என்றார். |