அனுர அரசுடன் சர்வதேச நாணய நிதிய குழு பேச்சு!

03.10.2024 08:32:38

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் எதிர்கால செயற்திட்டம் குறித்து ஆராய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழுவொன்று நேற்று இலங்கைக்கு விஜயம் செய்தது.

   

ஐ.எம்.எப். திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் 2.9 பில்லியன் டொலர் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் நான்காவது தவணையை பெறுவது பற்றி ஆராய்வதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

இதன்படி, ஐ.எம்.எப். பிரதிநிதிகள் குழுவிற்கும் புதிய அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள பொருளாதாரக் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான வேலைத்திட்டம் தொடர்பில் இதன் போது இருதரப்பும் மீளாய்வு செய்ததோடு அதன் எதிர்கால செயற்பாடுகளுக்கான திட்டங்கள் குறித்தும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இலங்கை தொடர்பான சாதகமான அணுகுமுறையை அதிகரித்து தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய சீர்திருத்தங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பாராட்டுத் தெரிவித்தனர்.

பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான இலங்கையின் அர்ப்பணிப்பு மற்றும் சர்வதேசத்தின் தொடர்ச்சியான ஆதரவை நோக்கி ஒரு தீர்க்கமான முன்னெடுப்பும் இங்கு கோடிட்டுக் காட்டப்பட்டது.