இன்று உலக எய்ட்ஸ் தினம்

01.12.2021 05:56:27

இன்று உலக எய்ட்ஸ் தினமாகும். சமத்துவமின்மையை ஒழித்து எய்ட்ஸ் நோயை இல்லாதொழிப்போம் – தொற்றுநோய்களை வெல்வோம் என்பதே இவ்வாண்டின் கருப்பொருளாகும்.

உலகின் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட முதலாவது நபர் 1981 ஆம் ஆண்டில் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் 1988 ஆம் ஆண்டு முதல், ஐக்கிய நாடுகளின் கீழுள்ள நாடுகளில் டிசம்பர் முதலாம் திகதி எய்ட்ஸ் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இன்றுவரை, உலகளவில் 79.3 மில்லியன் மக்கள் எச்.ஐ.வியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 36 மில்லியனுக்கும் அதிகமானோர் எய்ட்ஸ் நோயால் இறந்துள்ளனர்.

அண்மைய புள்ளிவிவரங்களின்படி, 2020 ஆம் ஆண்டின் இறுதியில், 37 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் எச்.ஐ.வியுடன் வாழ்ந்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டில் 1.5 மில்லியன் புதிய எச்ஐவி நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) தெரிவிக்கிறது.

1987 ஆம் ஆண்டில் இலங்கையின் முதல் எய்ட்ஸ் நோயால் கண்டறியப்பட்டார். எனினும், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் உலகில் எச்.ஐ.வி பரவல் மிகவும் குறைந்த நாடுகளில் ஒன்றாக இலங்கையில் கருதப்படுகிறது.

எவ்வாறாயினும், கடந்த ஆண்டு நாட்டில் 363 புதிய எச்.ஐ.வி தொற்றுகள் பதிவாகியுள்ளனர். எனினும், இது 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது குறைவான எண்ணிக்கையாகும்.

கொவிட் தொற்று காரணமாக எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தேசிய பாலியல் சார் நோய்கள் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.