கனேடிய, பிரித்தானிய தூதுவர்களைச் சந்திக்கிறது தமிழரசு!
|
கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இஸபெல் கத்ரின் மார்ட்டின் மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக் ஆகியோரை இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் திங்கட்கிழமை (04) கூட்டாகச் சந்திக்கவுள்ளனர். |
|
கனேடிய உயர்ஸ்தானிகர் இஸபெல் கத்ரின் மார்ட்டின் நேற்றைய தினம் கிழக்கு மாகாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கிறார். இலங்கைக்கான உயர்ஸ்தானிகராகப் பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாகக் கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்திருக்கும் அவர், மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்து பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புக்களை நடாத்தவுள்ளார். அதேவேளை பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக்கும் கிழக்கு மாகாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். அதன்படி கனேடிய மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்களுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற மற்றும் பிராந்திய மட்டப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நாளை திங்கட்கிழமை (4) பி.ப 4.00 மணிக்கு மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது. இச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் பாராளுமன்றக்குழுத் தலைவர் இரா.சாணக்கியன், தமிழரசுக்கட்சி வாலிப முன்னணி உறுப்பினர்கள், மகளிர் பிரிவு உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாநகரசபை மேயர் சிவம் பாக்கியநாதன் மற்றும் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் கே.துரைராஜசிங்கம் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். இதன்போது மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம், படையினரால் கையகப்படுத்தப்பட்டு இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ள காணிகள், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் தொடர் பிரயோகம் என்பன உள்ளடங்கலாக தமிழ்மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் மற்றும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படாமை குறித்து இருநாட்டு உயர்ஸ்தானிகர்களிடமும் விரிவாக எடுத்துரைக்கப்படவுள்ளது. |