இலங்கையில் கொரோனா பரவலையடுத்து மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு- யுனிசெப்
இலங்கையில் கொரோனா பரவல் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.
வழமையான வன்முறைச் சம்பவங்களை விட 40 வீதம் அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு மார்ச் முதல் ஒக்ஸ்ட் வரையான காலப்பகுதியில் இலங்கையில் பாடசாலைகள் மூடப்பட்டிருந்ததால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்காக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
எனினும், இலங்கை மாத்திரமின்றி உலகம் முழுவதும் தொலைதூரக் கல்வி முறையினால் விளக்கமளித்தல் மற்றும் கலந்துரையாடும் சந்தர்ப்பம் இல்லாமையும் சில மாணவர்களுக்கு இணையத்தள வசதி இல்லாமையும் வன்முறைகள் அதிகரிப்புக்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாடசாலை போசாக்கு வேலைத்திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாலும் மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக யுனிசெப் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.