யாழ்ப்பாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் நூதன போராட்டம்.

18.09.2026 15:06:34

யாழ்ப்பாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள், தமது வேலைவாய்ப்பு கோரிக்கையை வலியுறுத்தி இன்று நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் தபால் நிலையத்திற்கு முன்பாக இன்று பிற்பகல் 2 மணியளவில் ஒன்றுகூடிய வேலையற்ற பட்டதாரிகள், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு பதிவு தபால் மூலம் மகஜர் ஒன்றையும் அனுப்பி வைத்தனர்.

ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தில் பட்டதாரிகள் 5,000 பேர் மாத்திரமே உள்வாங்கப்படவுள்ளதாக அரசாங்கம் தீர்மானித்துள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, தபால் பெட்டிக்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி, கற்பூரம் காட்டி, தேங்காய் உடைத்து பட்டதாரிகள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அத்துடன், 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது வேலைவாய்ப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், தமது வேலைவாய்ப்பு தொடர்பான கோரிக்கைக்கு கடவுளும், தாய் தந்தையர்களைப் போன்ற பொதுமக்களும் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் வேலையற்ற பட்டதாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.