கடற்படையின் புதிய பிரதிப் பிரதானியாக ரியர் அட்மிரல் தம்மிக்க விஜேவர்தன இன்று (22) முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதத்தை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, கடற்படைத் தலைமையகத்தில் வைத்து அவரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்துள்ளார்.
கேகாலை, தோலங்கமுவ டட்லி சேனாநாயக்க மத்திய கல்லூரியின் பழைய மாணவரான தம்மிக்க விஜேவர்தன, 1992ஆம் ஆண்டு இலங்கை கடற்படையில் இணைந்து தனது கடற்படைப் பயணத்தை ஆரம்பித்தார்.
பின்னர் பல்வேறு உயர் கல்வி மற்றும் தொழில்சார் பயிற்சிகளைப் பெற்றதுடன், நீரியல் அளவையியல், பாதுகாப்பு மற்றும் மூலோபாயக் கற்கைகள் உள்ளிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றுள்ளார்.
தனது 30 ஆண்டுகளுக்கும் மேலான சேவைக் காலத்தில், கடற்படையின் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ள அவர், 2024ஆம் ஆண்டு ரியர் அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.
தற்போது பிரதிப் பிரதானியாகவும், வடக்குக் கடற்படைக் கட்டளையின் தளபதியாகவும், கடற்படை நீரியல் அளவையியல் பிரிவின் பிரதானியாகவும் பணியாற்றி வருகின்றார்.
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான மனிதாபிமான நடவடிக்கைகளில் பங்கேற்றமை உள்ளிட்ட அவரது சேவைகளுக்காக வீரவிக்ரம விபூஷணய, ரணவிக்ரம, ரணசூர, உத்தம சேவா மற்றும் தேசபுத்ர உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், கடற்படை மெய்வல்லுநர், ஜூடோ மற்றும் மல்யுத்த அணிகளிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள ரியர் அட்மிரல் தம்மிக்க விஜேவர்தன, திருமதி நாலிகா பெரேராவின் கணவரும், துல்நெத் மற்றும் சென்மித் ஆகிய இரு புதல்வர்களின் தந்தையும் ஆவார்.