நூலகங்களில் ஏஐ புத்தகங்கள் தயாரிக்கப்பட்ட வழக்கு விசாரணை இப்போது நீதிமன்றத்தில் தீவிரமடைந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இனி முன்னாள் லஞ்ச ஒழிப்புத்துறை தலைவர் ஜி. வெங்கட்ராமன் இந்த விவகாரத்தை ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்வார் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஏஐ புத்தகங்கள் தொடர்பாகவும் சில முக்கிய வாதங்கள் நடந்தன. கோவையில் உள்ள பெரியார் அறிவுலகத்தில் ஏஐ மூலம் தயாரிக்கப்பட்ட போலியான புத்தகங்கள் வைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. பல்வேறு போலி பெயர்களில் புத்தகங்கள் எழுதப்பட்டதாகவும் இதில் மிக பெரிய மோசடி நடந்துள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.    
இந்த விவகாரத்தில் திமுகவும் தவெகவும் மாறி மாறி குற்றஞ்சாட்டி வந்தன. இது தொடர்பாக திமுக சட்டப்பிரிவு இணை செயலாளர் பரந்தாமன் தாக்கல் செய்த மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இனி முன்னாள் லஞ்ச ஒழிப்புத்துறை தலைவர் ஜி. வெங்கட்ராமன் இந்த விவகாரத்தை ஆய்வு செய்து, நீதிமன்றத்தில் அவ்வப்போது அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஊழல் வழக்குகளை விசாரித்ததில் நீண்ட அனுபவம் கொண்டவர் என்பதால் ஐபிஎஸ் அதிகாரி ஜி. வெங்கட்ராமனுக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை (முன்னாள் தலைவரும், சிபிஐயில் உயர் பொறுப்பு வகித்தவருமான ஜி. வெங்கட்ராமன், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து, விசாரணையின் நிலவரம் குறித்து அவ்வப்போது அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி வி. லட்சுமிநாராயணன் உத்தரவிட்டார். மேலும், அவருக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருக்கும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் இந்த புத்தக கொள்முதல் விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் இரு நீதிபதிகள் அமர்வு அவமதிப்பு வழக்கை விசாரித்து வருகிறது.முந்தைய விசாரணையின்போது, இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், குற்றவியல் விசாரணையை தனி நீதிபதி கண்காணிக்க வேண்டும் என்றும், அவமதிப்பு வழக்கை இரு நீதிபதிகள் அமர்வு தொடர்ந்து விசாரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில், தற்போது விசாரணை ஆவணங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் பொறுப்பு வெங்கட்ராமனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட பதிப்பகங்களில் ஒன்றான அகல் விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் மோகனும் கைது செய்யப்பட்டு இருந்தார்.இன்றைய தினம் நடந்த விசாரணையின்போது, மூன்று புத்தகங்களை அரசு குற்றவியல் வழக்கறிஞர் நீதிபதியிடம் சமர்ப்பித்தார். அந்த புத்தகங்களில் இடம்பெற்றுள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என்றும், பல இடங்களில் வரலாற்று ரீதியாக தவறான தகவல்கள் இருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, இந்த புத்தகங்களை உருவாக்க ஏஐ பயன்படுத்தப்பட்டிருப்பதாக வாதிட்டார். இதற்கு வாய்ப்பு இருக்கவே செய்கிறது என நீதிபதிகளும் அதை ஏற்றுக்கொண்டனர்.பதிப்பகம் வெளியிட்ட மூன்று புத்தகங்களை பார்த்தபோது அதிர்ச்சி ஏற்பட்டதாக கூறிய நீதிபதிகள், பழங்கால தமிழர்கள் மாடுகளை வளர்ப்பதற்கு பதிலாக பயிரிட்டதாகவும், இலந்தை பழங்களை சாப்பிட்டதாகவும் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர். மற்ற இரண்டு புத்தகங்களும் குடிமை பணி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக எழுதப்பட்டவை என்றாலும், அதிலும் அபத்தமான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. மேலும், இத்தகைய தரமற்ற புத்தகங்களை மிக அதிக விலை கொடுத்து வாங்கியிருப்பதாகவும், அவற்றை இலவசமாக கூட யாரும் வாங்கியிருக்க மாட்டார்கள் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.